வால்பாறையில் ஓடுகளை உடைத்து வீட்டுக்குள் விழுந்த சிறுத்தை

வால்பாறையில் ஓடுகளை உடைத்து வீட்டுக்குள் சிறுத்தை விழுந்தது. அதன் நகம் கீறியதில் மூதாட்டிக்கு காயம் ஏற்பட்டது.
வால்பாறையில் ஓடுகளை உடைத்து வீட்டுக்குள் விழுந்த சிறுத்தை
Published on

வால்பாறை

வால்பாறையில் ஓடுகளை உடைத்து வீட்டுக்குள் சிறுத்தை விழுந்தது. அதன் நகம் கீறியதில் மூதாட்டிக்கு காயம் ஏற்பட்டது.

வால்பாறை

கோவை மாவட்டத்தில் மலைப்பிரதேசமான வால்பாறையில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை உள்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இங்கு குடியிருப்பை ஒட்டி தேயிலை தோட்டங்கள் உள்ளதால், அங்கு பதுங்கி இருக்கும் வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் வால்பாறை காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் சின்னம்மா (வயது 64). இவர் இரவில் தனது வீட்டில் முன்பு உள்ள அறையில் 3 பேரக்குழந்தைகளுடன் படுத்து உறங்கினார். மற்றொரு அறையில் அவருடைய மகன் படுத்து இருந்தார்.

வீட்டிற்குள் விழுந்த சிறுத்தை

இந்த நிலையில் நள்ளிரவு 12.30 மணிக்கு சின்னம்மா வீட்டில் ஓடுகளால் வேயப்பட்டு இருந்த மேற்கூரையில் இருந்து ஓடுகள் கீழே விழுந்தன. அத்துடன் வீட்டுக்குள் டமார் என்ற சத்தமும் கேட்டது.

இதனால் திடீரென்று சின்னம்மா எழுந்து பார்த்தபோது வீட்டிற்குள் சிறுத்தை விழுந்தது தெரியவந்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடந்த அவர், பேரக்குழந்தைகளை மற்றொரு அறைக்கு அனுப்பி வைத்தார்.

அத்துடன் தானும் அந்த அறைக்குள் செல்ல முயன்றபோது திடீரென்று அந்த சிறுத்தை அவர் மீது பாய்ந்தது.

மூதாட்டிக்கு காயம்

உடனே சுதாரித்துக்கொண்டு அவர் அங்கிருந்து நகர்ந்தார். இதனால் அவருடைய கையில் சிறுத்தையின் நகம் கீறியதில் காயம் ஏற்பட்டது. உடனே வீட்டிற்குள் இருந்த மகன் மற்றும் பேரக்குழந்தைகள் சத்தம் போட்டனர்.

அத்துடன் சின்னம்மாவும் சேர்ந்து அந்த அறைக்குள் பதுங்கிக்கொண்டு கதவை சாத்தினார். இதனால் வெளியே செல்ல வழி தெரியாத சிறுத்தை, வீட்டிற்குள் அங்குமிங்கும் ஓடியது.

பின்னர் மேற்கூரை உடைந்த இடத்தின் வழியாக குதித்து வெளியே ஓடி தப்பியது. பின்னர் சின்னம்மாவை அக்கம் பக்கத்தினர் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

வனத்துறையினர் ரோந்து

இது குறித்து தகவல் அறிந்த மானாம்பள்ளி வனச்சரக அதிகாரி மணிகண்டன் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

மேலும் இரவு நேரத்தில் அங்கு சிறுத்தை நடமாடுவதை தடுக்க வனத்துறையினர் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

வால்பாறையில் ஊருக்குள் நடமாடும் சிறுத்தையை பிடிக்க 2 இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டு உள்ளன.

அதில் சிறுத்தை சிக்காமல் வீட்டின் கூரையை உடைத்து உள்ளே விழுந்த சம்பவம் அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com