பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது லாரி மோதல்; 2 பேர் உடல் நசுங்கி பலி

பழனிக்கு பாதயாத்திரையாக சென்ற பக்தர்கள் மீது லாரி மோதியதில் 2 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது லாரி மோதல்; 2 பேர் உடல் நசுங்கி பலி
Published on

வையம்பட்டி,

பழனிக்கு பாதயாத்திரை

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த சூளியாபட்டி, கீழபொய்கைபட்டி, மணப்பாறைபட்டி, காரமேட்டுப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 40 பக்தர்கள் கீழபொய்கைப்பட்டியைச் சேர்ந்த குருசாமி(வயது 48)தலைமையில் பழனிக்கு பாதயாத்திரையாக நேற்று முன்தினம் புறப்பட்டுச் சென்றனர்.

அவர்கள் தனித்தனி குழுக்களாக பிரிந்து நடந்து சென்று கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டம், வையம்பட்டியை அடுத்த கீரனூர் பிரிவு சாலை அருகே ஒரு குழுவினர் பாதயாத்திரையாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது கும்பகோணத்தில் இருந்து திண்டுக்கல் மாவட்டம், வடமதுரைக்கு வைக் கோல் ஏற்றிச் சென்ற லாரி பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது மோதியது.

2 பேர் பரிதாப சாவு

இதில் சூளியாபட்டியைச் சேர்ந்த பெரியசாமி(42), கீழபொய்கைப்பட்டியைச் சேர்ந்த ராமசாமி(62) இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சூளியாபட்டியைச் சேர்ந்த காண்டிராக்டர் வெங்கடேசுவரன்(51), மணப்பாறைபட்டியைச் சேர்ந்த அழகர்சாமி என்ற சின்னப்பன்(35), காரமேட்டுப்பட்டியைச் சேர்ந்த முத்துசாமி(55) ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். பின்னர் படுகாயமடைந்த 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சைக்குப்பின் மேல் சிகிச்சைக்காக வெங்கடேசுவரன் திருச்சி தனியார் மருத்துவ மனைக்கும், சின்னப்பன் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், முத்துசாமி மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

லாரி டிரைவர் கைது

விபத்து பற்றி தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக வையம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து லாரியை ஓட்டி வந்த திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த பாபுவை (36)கைது செய்தனர்.இதே போன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சியில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதியதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் விபத்தில் சிக்கி பலியாகி வருவது பக்தர் களை வேதனையடைய செய்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com