2 ஷிப்டு முறையால் தினமும் 12 மணி நேரப்பணி திருச்சி மாநகர போலீசார் மன உளைச்சலால் புலம்பி தவிப்பு

2 ஷிப்டு முறையால் தினமும் 12 மணி நேரம் பணி செய்வதால் போலீசார் ஓய்வின்றி புலம்பி தவித்து வருகிறார்கள்.
2 ஷிப்டு முறையால் தினமும் 12 மணி நேரப்பணி திருச்சி மாநகர போலீசார் மன உளைச்சலால் புலம்பி தவிப்பு
Published on

திருச்சி,

கொரோனா ஊரடங்கு வேளையில் 2 ஷிப்டு முறையால் தினமும் 12 மணி நேரம் பணி செய்வதால் போலீசார் ஓய்வின்றி புலம்பி தவித்து வருகிறார்கள்.

போலீசார் பணி

கொரோனா முழு ஊரடங்கு அமலில் இருப்பதால், போலீஸ் நிலையப்பணிகளுடன், தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருபவர்களை கண்காணிக்கும் பொறுப்பு தற்போது மாநகர போலீசாருக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகரில் வழக்கமாக 8 சோதனைச்சாவடிகள் உள்ளன. தற்போது அது 20 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாநகரில் முக்கிய சாலைகளில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக செக்கிங் பாயிண்ட்' அமைத்து வாகன தணிக்கை உள்ளிட்ட பணிகளை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள். திருச்சி மாநகரில் போலீஸ் கமிஷனராக லோகநாதன் முன்பு பணியாற்றியபோது ஏ-பி-சி என்ற 3 ஷிப்டு முறையில் போலீசார் பணியமர்த்தப்பட்டனர். இதனால், ஒரு ஷிப்டுக்கு 8 மணி நேரம் பணி முடித்து போலீசார் ஓய்வுக்கு திரும்புவது வழக்கம்.

2 ஷிப்டாக மாற்றம்

அத்துடன் மாநகர போக்குவரத்து பிரிவு போலீசார், குற்றப்பிரிவு போலீசார் மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரிவு போலீசார் அனைவரும் ஒன்றாக இணைந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். முந்தைய கொரோனா ஊரடங்கு வேளையிலும் இதே நிலைதான் நீடித்து வந்தது.

இந்த நிலையில் தற்போது போலீஸ் கமிஷனராக அருண் பொறுப்பேற்ற பின்னர் போலீசாருக்கான பணியினை ஏ-பி என்ற வகையில் மாற்றி அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ஒவ்வொரு போலீசாரும் 12 மணி நேரத்துக்கும் அதிமாக தொடர்ந்து பணியாற்றும் சூழல் உள்ளது.

பணிச்சுமை

இந்த முறையில் பணி நேரம் அதிமாக உள்ளதால் பணிச்சுமையுடன் மன அழுத்தமும் ஏற்பட்டுள்ளது. கணவன், மனைவி போலீஸ் பணியில் இருந்தால் குடும்பத்தை சரிவர கவனிக்க முடியாத சூழலில் குடும்ப பிரச்சினை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், குழந்தைகள் மீது கவனம் செலுத்த முடியவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.

உதாரணமாக ஏ-பி முறையில் காலை 6 மணிக்கு பணிக்கு வரும் போலீசார் பகல் 12 மணி வரை பணியாற்ற வேண்டும். பின்னர் 6 மணிநேர ஓய்வுக்கு பின் மீண்டும் மாலை 6 மணி முதல் பணியை தொடர்ந்து இரவு 12 மணி வரை மேற்கொள்ள வேண்டும். பின்னர் மறுநாள் காலை 6 மணிக்கு அதே பணியை தொடரும் வகையிலும், பகல் 12 மணிக்கு பணிக்கு வரும் போலீசார் மாலை 6 மணி வரை பணியாற்ற வேண்டும். பின்னர் 6 மணிநேர ஓய்வுக்கு பின்னர் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை பணியாற்ற வேண்டும். பின்னர் மறுநாள் பகல் 12 மணிக்கு அதே பணியை தொடரும் வகையிலும் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.

புலம்பல்

மேலும் முன்பு ஒருங்கிணைந்து பணியாற்றிய போலீசார் தற்போது தனித்தனியாக செக்கிங் பாயிண்ட்களில் பணியாற்ற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். அதாவது போக்குவரத்து பிரிவு போலீசார், குற்றப்பிரிவு போலீசார் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் தனித்தனி பாயிண்ட்களில் நின்று கண்காணிப்பில் ஈடுபட வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். எனவே, முன்பு இருந்தது போல பழையபடி ஏ-பி-சி என்ற ஷிப்டு முறையில் 8 மணி நேரப்பணி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் போலீசார் புலம்பி தவிக்கின்றனர்.

அதிகாரிகள் கருத்து

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, திருச்சி மாநகரப்பகுதிகளில் அதிகமான இடங்களில் சோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், போக்குவரத்து போலீசார் தனியாக சோதனை மையங்களை அமைத்துள்ளதால், போலீசார் பற்றாக்குறை உள்ளது.

எனவேதான் ஏ-பி முறையில் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. போலீசார் கூடுதல் நேரம் பணியாற்றினாலும் அதற்கேற்ற வகையில் ஓய்வும் வழங்கப்படுகிறது. இந்த சுழற்சிமுறை பணி போலீசாருக்கு மட்டுமல்ல. அனைத்து பிரிவு அதிகாரிகளுக்கும் பொருந்தும்' என்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com