போலீஸ் என்று கூறி மூதாட்டியிடம் நூதன முறையில் சங்கிலி அபேஸ் மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

போலீஸ் என்று கூறி மூதாட்டியிடம் நூதன முறையில் 6½ பவுன் சங்கிலியை ‘அபேஸ்‘ செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
போலீஸ் என்று கூறி மூதாட்டியிடம் நூதன முறையில் சங்கிலி அபேஸ் மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
Published on

திருச்சி,

திருச்சி கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் ராமலிங்கம். இவருடைய மனைவி உமாதேவி(வயது 60). இவர் நேற்று மதியம் பொன்மலை சந்தையில் பொருட்கள் வாங்கி கொண்டு ஒரு பஸ்சில் ஏறி கொட்டப்பட்டு பால்பண்ணை பஸ் நிறுத்தத்தில் வந்து இறங்கினார். பின்னர் அவர் கொட்டப்பட்டு இந்திராநகர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2 மர்ம நபர்கள் உமாதேவியிடம் நைசாக பேச்சு கொடுத்தனர். அப்போது அவர்கள் இருவரும் தங்களை போலீஸ் என்று கூறி, தற்போது சங்கிலி பறிப்பு அதிகமாக நடக்கிறது, நகையை வெளியே தெரியும்படி போட்டு செல்லலாமா? என்று கண்டித்ததோடு நகையை கழற்றி தாருங்கள், நாங்கள் பாதுகாப்பாக பேப்பரில் மடித்து தருகிறோம், என்று கூறினர்.

இதனை நம்பிய உமாதேவி, கழுத்தில் கிடந்த 6 பவுன் சங்கிலியை கழற்றி அவர்களிடம் கொடுத்தார். பின்னர் நகையை பேப்பரில் வைத்து மடிப்பது போல் நடித்த அவர்கள் அந்த நகையை அபேஸ் செய்து கொண்டு, வேறொரு பேப்பர் பொட்டலத்தை அவரிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து சென்றனர்.

சிறிது தூரம் கடந்த பின்னர் உமாதேவி அந்த பேப்பர் பொட்டலத்தை பிரித்து பார்த்தார். அப்போது அதில் சிறிய கற்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த உமாதேவி இது குறித்து பொன்மலை குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை பொன்மலை கொட்டப்பட்டு இந்திராநகர் பகுதியில் சந்தேகப்படும்படியாக நபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனைகண்ட பொதுமக்கள், அந்த நபர்தான் உமாதேவியிடம் சங்கிலியை அபேஸ் செய்தவராக இருக்கலாம் என்று கருதி அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது. அதன்பேரில் அவரை போலீசார் விடுவித்தனர்.

திருச்சி உறையூர் மேலபாண்டமங்கலம் ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்த வெங்கடேசபெருமாள் மனைவி அஷ்டலட்சுமி (வயது 36). இவர் நேற்று முன்தினம் இரவு தனது மகளுடன் உறையூர் பஞ்சவர்ணசுவாமி கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு ஸ்கூட்டரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். ஸ்கூட்டரை மகள் ஓட்ட, பின்னால் அஷ்டலட்சுமி அமர்ந்திருந்தார். வீடு அருகே சென்ற போது, அவர்களை பின்தொடர்ந்து ஒரு மோட்டார் சைக்கிளில் வந் 2 மர்ம நபர்கள் அஷ்டலட்சுமியின் கழுத்தில் கிடந்த 2 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்று விட்டனர்.

இது தொடர்பாக அஷ்டலட்சுமி உறையூர் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com