வால்பாறையில் அரசுபஸ்சை வழிமறித்து காட்டுயானைகள் அட்டகாசம்

வால்பாறையில் அரசுபஸ்சை வழிமறித்து காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன.
வால்பாறையில் அரசுபஸ்சை வழிமறித்து காட்டுயானைகள் அட்டகாசம்
Published on

வால்பாறை,

வால்பாறையில் டேன்டீ எஸ்டேட் நிர்வாகத்திற்கு சொந்தமான பத்தாம்பாத்தி எஸ்டேட் குடியிருப்பு பகுதிக்குள் நேற்று நள்ளிரவில் 8 காட்டுயானைகள் கூட்டமாக, புகுந்தன. இந்த யானைகள் தொழிலாளி தமிழ் செல்வியின் வீட்டின் பூஜை அறையின் சுவற்றை இடித்து துதிக்கையை உள்ளே விட்டு அங்கிருந்த அனைத்து பொருட்களையும் உடைத்து சேதப்படுத்தின.

இதனை அறிந்த எஸ்டேட் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து காட்டுயானைகளை விரட்டினர். இதனால் அந்த யானைகள் பத்தாம்பாத்தி பகுதியிலிருந்து உபாசிக்கு செல்லும் சாலையில் போய் நின்று கொண்டன. அந்த நேரத்தில் வால்பாறையிலிருந்து உபாசிக்கு அரசு பஸ் வந்ததால், அதனை அந்த யானைகள் வழிமறித்து அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த அரசு பஸ் பயணிகளுடன் நீண்ட நேரம் பத்தாம் பாத்தி சாலையில் நின்றன. பின்னர் பஸ்பயணிகள், எஸ்டேட் பகுதி மக்கள் அனைவரும் தகரங்களை தட்டியும், கூச்சலிட்டும் காட்டுயானைகளை விரட்டினர். இதனை தொடர்ந்து அந்த காட்டுயானைகள் அங்கிருந்து சென்றன.

அதன் பின்பு அரசு பஸ் உபாசிக்கு புறப்பட்டு சென்றது. இதுபோன்று கல்லார் எஸ்டேட் பகுதிக்குள் சென்ற காட்டுயானைகள் அங்கிருந்த அரசு தொடக்கப்பள்ளியின் பாதுகாப்பு கம்பி வேலியை உடைத்துக் கொண்டு பள்ளிக்கூடத்திற்குள் நுழைந்தன. அதனை அறிந்த எஸ்டேட் தொழிலாளர்களும் வனத்துறையினரும் அவற்றை விரட்ட தொடங்கினார். இதனால் அந்த யானைகள் வனப்பகுதிக்குள் சென்றது.

இதுபோல கெஜமுடி எஸ்டேட் பகுதியில் முகாமிட்டிருந்த 4 குட்டிகள் உட்பட 12 காட்டு யானைக் கூட்டம் பகல் நேரத்திலேயே தேயிலைத் தோட்டம் வழியாக நடந்துவந்து தாய்முடி எஸ்டேட் மேல் பிரிவு பகுதியில் உள்ள 6-ம் நம்பர் தேயிலைத் தோட்ட பகுதியில் முகாமிட்டன. இதனால் அந்த தேயிலைத் தோட்ட பகுதியில் இலை பறிக்கும் பணி பாதிக்கப்பட்டது. மானாம்பள்ளி வனச்சரகர் சேகர் உத்தரவின்படி வனத்துறையினர்,வேட்டைத்தடுப்பு காவலர்கள் அந்த பகுதியில் முகாமிட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துவிடாமல் கண்காணித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com