அனல்பறக்கும் சட்டமன்ற தேர்தல்.. தமிழகத்தில் மத்திய மந்திரிகள் இன்று ரோடு ஷோ

தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு ஆதரவாக மத்திய மந்திரிகள் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர்.
அனல்பறக்கும் சட்டமன்ற தேர்தல்.. தமிழகத்தில் மத்திய மந்திரிகள் இன்று ரோடு ஷோ
Published on

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரம் வருகிற 21-ந்தேதி மாலையுடன் முடிவடைகிறது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே இருப்பதால் தலைவர்கள் சூறாவளியாக சுற்றுப்பயணம் செய்து தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.

கோடை வெயிலில் கொளுத்தும் அனலையும் பொருட்படுத்தாமல் தமிழக தலைவர்கள் மற்றும் மத்திய மந்திரிகள் பிரசாரம் செய்து வருவதால் தேர்தல்களம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது. இதன்படி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஈரோடு மாவட்டம் சிவகிரியில் இன்று (19.04.2026) காலை 10 மணியளவில் வாக்கு சேகரிக்க உள்ளார். அப்போது மொடக்குறிச்சி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து ரோடு ஷோ மேற்கொள்ள உள்ளார். அதனைத் தொடர்ந்து சென்னை மயிலாப்பூர் தொகுதியில் இன்று மாலை 4 மணியளவில் ரோடு ஷோ மூலம் அமித்ஷா பிரசாரம் செய்ய உள்ளார்.

முன்னதாக மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் அமித்ஷா சாமி தரிசனம் செய்ய உள்ளார். அதன் பின்னர், மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து ரோடு ஷோ மேற்கொள்கிறார். இதனையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

அதே போன்று மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங், இன்று தென் தமிழகத்தில் தீவிர பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். அதன்படி. திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் இன்று மதியம் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார். அதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்டம் புளியங்குடியிலும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதன் ஒரு பகுதியாக பணகுடியில் 400 மீட்டர் தொலைவுக்கு ரோடு ஷோவில் ராஜ்நாத் சிங் பங்கேற்க உள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு ஆதரவாக பிரதமர் மோடி, மத்திய மந்திரி பியூஷ் கோயல் உள்ளிட்டோர் ஏற்கனவே வாக்கு சேகரித்து சென்றனர். தேர்தலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள சூழலில், மத்திய மந்திரிகள் தமிழகத்திற்கு வருகை தந்து தங்களுடைய கூட்டணிக்கு ஆதரவாக தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com