திண்டுக்கல் சீனிவாசன் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு

அ.தி.மு.க. வேட்பாளர் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் சீனிவாசன் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு
Published on

திண்டுக்கல்,

தமிழக சட்டமன்ற தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்பதால், அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் என அனைவரும் போட்டிப்போட்டு வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இ.பெ.செந்தில்குமார் நேற்று, 4 பேருடன் திண்டுக்கல் ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் ஆர்.டி.ஓ. பழனிவேலிடம் வேட்புமனு தாக்கல் செய்து கொண்டிருந்தார்.

இ.பெ.செந்தில்குமாருக்கு மட்டும் 4 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. எனவே வேட்பு மனுக்களை சரிபார்ப்பதற்கு தேர்தல் அலுவலர்களுக்கு கூடுதல் நேரம் தேவைப்பட்டது. இதற்கிடையே ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு வந்த அ.தி.மு.க. வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன், நுழைவு வாயிலில் காத்திருந்தார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் உள்ளே இருப்பவர்கள் வெளியே வரவில்லை.

இதையடுத்து முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், 4 பேருடன் ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்குள் சென்றார். இதை பார்த்த தேர்தல் அலுவலர்கள் ஒரே நேரத்தில் தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்ய வந்துவிட்டனரே என நினைத்தனர். பின்னர் இ.பெ.செந்தில்குமாரின் வேட்புமனுக்களை அலுவலர்கள் வேகமாக சரிபார்த்து ஏற்றனர். அதன்பிறகு முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வேட்புமனு தாக்கல் செய்தார். இதனால் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே வேட்பு மனு தாக்கல் செய்யும் போது அத்துமீறி உள்ளே நுழைந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி அரசு அதிகாரிகள் மற்றும் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறி முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எம்.எல்.ஏ. உள்பட 5 பேர் மீது திண்டுக்கல் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com