

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன. சட்டசபை தேர்தலில் 4 முனை போட்டி நிலவி வருகிறது. அதன்படி திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் என 4 முனை போட்டி நிலவுகிறது.
தேர்தலில் திமுக 164 தொகுதிகளில் போட்டியிடுகிறது. திமுக கூட்டணி கட்சிகள் 70 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. திமுக கூட்டணியில் போட்டியிடும் 70 தொகுதிகள் பட்டியல் வெளியான நிலையில் திமுக போட்டியிடும் 164 தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் பட்டியலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
அதில், அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு 3-வது முறையாக திருவெறும்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் “கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பின்படி, கழக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் வாழ்த்துகளோடு கழகத்தின் சார்பில் எனது தாய் வீடான திருவெறும்பூர் தொகுதியில் 3வது முறையாக போட்டியிடவுள்ளோம்.
கழக முதன்மைச் செயலாளர் அண்ணன் கே.என்.நேருவின் வழிகாட்டுதலில், பெருவாரியான வாக்குகள் பெற்று, வெற்றி பெறுவோம். திராவிட மாடல் 2.O ஆட்சியில் அன்பில் இன் திருவெறும்பூர் 3.0 (Anbil_in_Thiruverumbur 3.O) எனும் நிலையை உழைப்பின் வழி உறுதி செய்வோம்” என தெரிவித்துள்ளார்.