

தருமபுரி,
தமிழக சட்டசபைக்கான தேர்தல் ஏப்ரல் 23-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ந் தேதி நடைபெற்று அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த முறை தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியா தருமபுரி தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
நம் வீட்டில் படித்த பிள்ளைகளுக்கு திமுக ஆட்சியில் வேலை கொடுக்கவில்லை. பெண்களுக்கும் சரியான பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை. இந்த திமுக அரசு இனி நீடித்தால் எந்த பயனும் பொதுமக்களுக்கு கிடைக்காது. விடியா திமுக ஆட்சி தொடர்ந்தால் பெண்கள் தைரியமாக வெளியே செல்லமுடியாது. சிறிய குழந்தை முதல் வயதான பெண்கள் வரை பாலியல் கொடுமைகள் தான் இருக்கும்.
தருமபுரி மாவட்ட மருத்துவகல்லூரி, தொப்பூர் மேம்பாலம் உள்ளிட்ட பாமகவின் சாதனைகளை கூறி வாக்கு சேகரித்து வந்தார். மாவட்டத்தின் நீர் மேலாண்மை திட்டங்களை நிறைவேற்ற தனக்கு வாக்களியுங்கள் என்று கூறி தர்மபுரியில் உள்ள வார்டுகளில் தீவிரமாக பிரசாரம் செய்தார்.