

சென்னை,
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு 23ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக அரசியல் கட்சிகள் தங்களின் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. தேர்தல் பிரசாரம் 21-ம் தேதி மாலை 5 மணியுடன் நிறைவடையும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு பிரசாரம் செய்வதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும், அதிகாரிகள் ஆளும் கட்சிக்கு சாதகமாக இருப்பதாகவும் கூறி அவர்களை மாற்றம் செய்ய அ.தி.மு.க., பா.ஜ.க., த.வெ.க. உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் தொடர் புகார்களை வழங்கி வந்தன.
இந்த சூழலில் தமிழ்நாட்டில் தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், டி.ஜி.பி., லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி., சென்னை மாநகர ஆணையர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள், மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்ட பல அதிகாரிகளை தேர்தல் ஆணையம் மாற்றி இருந்தது.
இந்நிலையில் தமிழ்நாடு காவல்துறையில் உளவுத்துறை ஐ.ஜி. செந்தில் வேலன் மாற்றப்பட்டு ஐ.ஜி. அவிநாஷ் குமாரை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அவினாஷ் குமாரின் நியமனம் உடனடியாக நடைமுறைக்கு வருவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளநிலையில் உளவுத்துறைக்கு புதிய ஐ.ஜி. நியமனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.