

நாகர்கோவில்,
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 23-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டு விட்டது. ஒவ்வொரு கட்சியும் தங்களது வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்தார்.
அதன்படி கொளத்தூர் தொகுதியில் மீண்டும் களம் இறங்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதன்பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.
திருவாரூரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய மு.க.ஸ்டாலின், தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தை செய்து வருகிறார். அதன்படி நேற்று நெல்லை மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அங்கு பிரசாரத்தை முடித்ததும் நேற்று இரவு குமரி மாவட்டம் சென்றார். அவருக்கு கன்னியாகுமரியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தி.மு.க.வினரும், கூட்டணி கட்சியினரும் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். வரவேற்பை ஏற்றுக் கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த ஓட்டலில் தங்கி ஓய்வெடுத்தார்.
இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி அளவில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெறும் பிரசார பொதுக்கூட்டம் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக்கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், கன்னியாகுமரி தொகுதி தி.மு.க. வேட்பாளருமான மகேஷ், நாகர்கோவில் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஆஸ்டின் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை அறிமுகம் செய்து, அவர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
இதற்காக நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக்கல்லூரி மைதானத்தில் பிரமாண்டமான பொதுக்கூட்டமேடை அமைக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சிகளின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி குமரி மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் தலைமையிலான போலீசார் மேற்கொண்டுள்ளனர். தேர்தல் பிரசார கூட்டம் முடிந்ததும் அவர் நாகர்கோவிலில் இருந்து நெல்லை மார்க்கமாக தென்காசி மாவட்டத்துக்கு புறப்பட்டு செல்ல இருக்கிறார். எனவே அந்த சாலையிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.