

சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை (வியாழன்) நடைபெற உள்ளது. இதையடுத்து மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர்.
தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர், த.வெ.க. என 4 முனை போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் வெற்றி வாகை சூடுவதற்காக ஒவ்வொரு கட்சி களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டன.
வாக்காளர் பட்டியல் தொடர்பான எஸ்.ஐ.ஆர். பணிகள் நிறைவடைந்த நிலையில், சுமார் 40 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டன. எனவே, ஏற்கனவே வாக்களித்து வருபவர்களே இந்த முறை வாக்களித்தாலும், தமிழகத்தின் வாக்கு சதவீதம் 85-ஐ தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் நாள் : 23.04.2026
நேரம் : காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை
மொத்த வாக்களர்கள் : 5.73 கோடி பேர் (5,73,43,291)
இளம் வாக்காளர்கள் (29 வயதிற்குள்) : 1.21 கோடி பேர் (1.21,77,496)
மூத்த வாக்காளர்கள் (70 வயதிற்கு மேல்) : 44.98 லட்சம் பேர் (44,98,391)
தகுதியுள்ள வேட்பாளர்கள்: ஆண்கள் - 3,579 , பெண்கள் - 443 , மூன்றாம் பாலினம் - 1.
மொத்த வேட்பாளர்கள் : 4,023 பேர்
வாக்குச்சாவடிகள் : 75,064
1. வாக்குச்சாவடிக்குள் நுழையும் முன் வரிசையில் நிற்க வேண்டும்.
2. வாக்குச்சாவடிக்குள் செல்போனுக்கு அனுமதி இல்லை.
* தேர்தல் பணியாளரிடம் ‘சுவிட்ச் ஆப்’ செய்த உங்கள் அலைபேசியை ஒப்படையுங்கள்.
* பின்னர் அதற்கான டோக்கனை பெறுங்கள்
3. வாக்குச்சாவடிக்குள் நுழைந்த பின்..
முதல் அலுவலர்
உங்கள் அடையாள அட்டை, 'பூத் ஸ்லிப்'பை சோதிப்பார். உங்கள் பாகம் எண், வரிசை எண்ணை உரக்கப் படிப்பார். அதை வேட்பாளரின் ஏஜென்டுகள் சரிபார்ப்பர்.
இரண்டாவது அலுவலர்
இடது கை ஆள்காட்டி விரலில் 'மை' வைப்பார். கையெழுத்தையும் பெறுவார். ஒரு 'ஸ்லிப்' வழங்குவார்.
மூன்றாவது அலுவலர்
வாக்குப்பதிவு இயந்திரத்தின் கட்டுப்பாட்டாளர். 'ஸ்லிப்'பை வாங்கி பரிசோதிப்பார். ஒரு பட்டனை அழுத்தி, உங்களை ஓட்டளிக்க அனுமதிப்பார்.
4. வாக்களிக்கும் முறை
* வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்கு செல்ல வேண்டும்.
* மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் விருப்பமான வேட்பாளருக்கு நேராக உள்ள பட்டனை அழுத்த வேண்டும். 'பீப்' ஒலி கேட்கும்.
* 'விவிபேட்' மெஷின் நீங்கள் அழுத்திய சின்னத்தை காண்பிக்கும்.
* இப்போது நீங்கள் ஓட்டளித்து விட்டீர்கள். ஜனநாயக கடமையாற்றிய பெருமிதத்தோடு வெளியே வாருங்கள்.
* வெளியே சென்று 'டோக்கனை' கொடுத்து செல்போனைை திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள்.