பிரேமலதா விரும்பும் விருத்தாசலம்; தி.மு.க. கைகாட்டும் விருகம்பாக்கம்!

தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு இன்னும் தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை.
பிரேமலதா விரும்பும் விருத்தாசலம்; தி.மு.க. கைகாட்டும் விருகம்பாக்கம்!
Published on

சென்னை,

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், முதல் முறையாக தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ள தே.மு.தி.க.வுக்கு 10 தொகுதிகள், ஒரு ராஜ்ய சபா சீட் வழங்குவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, ராஜ்ய சபா சீட் வழங்கப்பட்டு, தே.மு.தி.க. பொருளாளர் எல்.கே.சுதீஷ் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மல்லுக்கு நிற்கும் கூட்டணி கட்சிகள்

ஆனால், தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு இன்னும் தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. என்றாலும், தே.மு.தி.க.வை காரணம் காட்டி, கூட்டணியில் உள்ள இரு கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை தி.மு.க.விடம் கூடுதல் தொகுதிகள் கேட்டு மல்லுக்கு நிற்கின்றன. இந்த நிலையில், தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதாவை சென்னையில் உள்ள விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட செய்து, தேர்தல் பிரசாரத்திற்கும் தமிழகம் முழுவதும் பயன்படுத்த தி.மு.க. தலைமை முடிவு செய்துள்ளது.

விருகம்பாக்கம் சொந்த தொகுதி

இந்த விருகம்பாக்கம் தொகுதியில் 2011-ம் ஆண்டு தேர்தலில், தே.மு.தி.க.வை சேர்ந்த பார்த்தசாரதி வெற்றி பெற்றிருக்கிறார். மேலும், பிரேமலதாவின் சொந்தத் தொகுதியும் இதுதான். ஆனால், பிரேமலதாவோ விஜய்காந்த் 2006-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு, முதன்முதலில் வெற்றி பெற்ற விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடவே விரும்புகிறாராம். செண்டிமெண்டாக இதை அவர் பார்த்தாலும், தி.மு.க. தலைமை இதற்கு ஒத்துக்கொள்ளவில்லையாம்.

பிரேமலதா தவிப்பு

விருகம்பாக்கம் தொகுதியில் அ.தி.மு.க. தரப்பில் வி.என்.ரவி வேட்பாளராக களம் இறக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. இவரை எதிர்க்க பிரேமலதாவே சரியான ஆள் என்று தி.மு.க. தலைமை கருதுகிறதாம். இதனால், விருத்தாசலமா?, விருகம்பாக்கமா? என்பதை முடிவு செய்ய முடியாமல் பிரேமலதா தவித்து வருகிறாராம்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com