

நெல்லை,
தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் சுறுசுறுப்பாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் தமிழக அரசியல் களத்தில் புதிய வரவான த.வெ.க. முழு வீச்சில் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளது. த.வெ.க. தலைவர் விஜய் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார். வட மாவட்டங்களை தொடர்ந்து தென் மாவட்டங்களிலும் விஜய் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.
நெல்லை, தூத்துக்குடியில் விஜய் பிரசாரத்தில் வழியெங்கும் ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். விஜய் பிரசாரம் செல்லாத இடங்களில் அவரது உருவ பொம்மைகளை வைத்து தொண்டர்கள் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்து இருக்கிறார்கள். இதற்கும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்தநிலையில், விஜய்க்கு ஆதரவாக நடிகர் ராமராஜனும் களம் இறங்க உள்ளார்.
கடந்த காலங்களில் அ.தி.மு.க.வுக்காக பிரசாரம் மேற்கொண்டிருந்த நடிகர் ராமராஜன் தற்போது, விஜய்க்காக தென் மாவட்டங்களில் சில தொகுதிகளில் பிரசாரம் செய்ய உள்ளார். அதன்படி, ஆலங்குளம் தொகுதியில் ராமராஜன் பிரசாரம் செய்ய உள்ளார். தொடர்ந்து தென் மாவட்டங்களில் அவர் பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் பதிவிட்டு, உற்சாகம் அடைந்து வருகின்றனர்.