

கோவை,
கோவை மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், தமிழகம் முழுவதும் தி.மு.க. பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றிய நிலையில், கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. கோவை தெற்கில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த பா.ஜனதா வெற்றி பெற்றது. இதேபோல் கடந்த 2016 தேர்தலிலும் சிங்காநல்லூர் தொகுதியை தவிர, மற்ற 9 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது.
கடந்த 25 ஆண்டுகளாக கோவை மாவட்டம் அ.தி.மு.க. கோட்டையாக விளங்கியது. இந்த நிலையில் அ.தி.மு.க. கோட்டை என்ற நிலையை இந்த தேர்தலில் த.வெ.க. தன்வசப்படுத்தி உள்ளது. இதன்படி கோவை வடக்கு, சூலூர், கிணத்துக்கடவு. சிங்காநல்லூர், மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம் ஆகிய 6 தொகுதிகளில் த.வெ.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். வால்பாறை, பொள்ளாச்சி, கோவை தெற்கு தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெற்றது.
தொண்டாமுத்தூர் தொகுதியில் மட்டும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. கடந்த தேர்தலில் 10 தொகுதிகளை பெற்று இருந்த அ.தி.மு.க., இந்த தேர்தலில் 9 தொகுதிகளை இழந்து ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளதால் கோவை மாவட்டம் அ.தி.மு.க. கோட்டை என்ற பிம்பம் உடைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் த.வெ.க வெற்றி பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், கோவையிலும் அ.தி.மு.க. கோட்டையில் த.வெ.க. ஓட்டையை போட்டு வெற்றி பெற்றுள்ளது பொதுமக்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. த.வெ.க. வெற்றி பெற்ற அனைத்து தொகுதிகளுமே அ.தி.மு.க. அதிக முறை வெற்றி பெற்று தன்வசம் வைத்து இருந்தது ஆகும்.