

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 23-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடந்தது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன் முடிவுகள் வரத் தொடங்கியதும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அதிக வாக்குகளை பெற்று முன்னிலையில் இருந்து வந்தது.
இறுதியாக தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை. ஆனால் த.வெ.க.வுக்கு, அந்த அளவுக்கு பெரும்பான்மை இல்லை. இருந்தாலும் விஜய் ஆட்சியை அமைக்க கவர்னரிடம் உரிமை கோருவார் என்று தெரிகிறது. கவர்னரும் அதற்கு அனுமதி அளிப்பார். அதனால் விஜய் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின்பு சட்டசபையில் குறிப்பிட்ட தினங்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.
த.வெ.க. பெரும்பான்மைக்கு கூடுதலாக 12 இடங்கள் தேவைப்படுகிறது. எனவே தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், தே.மு.தி.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க. ஆகியோர் விஜய்க்கு ஆதரவு அளிப்பார்கள் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் கூட்டணி ஆட்சி அமைக்க இதுவரை தவெகவிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. தவெக அழைத்தால் மாநில செயற்குழு, மாநில நிர்வாகக் குழுவை கூட்டி ஆதரவு அளிக்கலாமா? இல்லையா? என்பது பற்றி ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று கம்யூனிஸ்டு கட்சிகள் (சிபிஎம், சிபிஐ) தெரிவித்துள்ளன. இதைபோல த.வெ.க.வுக்கு ஆதரவு அளிக்க காங்கிரஸ் கட்சியும் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தேர்தல் முடிவுகள் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கருத்து தெரிவித்தார். அப்போது த.வெ.க.வுக்கு ஆதரவா? என்ற கேள்விக்கு பதில் அளித்த திருமாவளவன், “முக்கியமான அரசியல் முடிவுகளை வி.சி.க., இடதுசாரிகள் இணைந்தே எடுப்போம். த.வெ.க.வுக்கு ஆதரவளிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. அரசியல் முடிவுகளை கம்யூனிஸ்ட்டுகளுடன் இணைந்து எடுப்போம். பொறுத்திருந்து பார்ப்போம். அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. சங்பரிவார் அரசியலை வீழ்த்த வேண்டும் என்ற எங்கள் கூட்டணியின் முயற்சி வெற்றி பெற்றுள்ளது” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “மக்கள் விரோத நிலைப்பாடு, கேஸ் உட்பட அத்தியாவசிய விலை உயர்வை கண்டித்து விசிக, இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று கூறினார்.