

உசிலம்பட்டி,
பேரையூர் தாலுகா எழுமலை பேரூராட்சியில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை பேரையூர் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நீதிபதி ராஜாமகேஷ் ஆய்வு செய்தார். இதில் எ.பெருமாள்பட்டி, எழுமலையில் உள்ள புதிய பஸ்நிலையம், வங்கிநாயராயணபும் உள்ளிட்ட பகுதிகளில் அகற்றப்பட்ட சீமைக்கருவேல மரங்களை பார்வையிட்டார். தொடர்ந்து எழுமலை பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து சீமைக்கருவேல மரங்களையும் உடனடியாக அகற்ற துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பேரூராட்சி அலுவலர்களை அறிவுறுத்தினார். நிகழ்ச்சியின் போது பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தரி, சார்பு ஆய்வாளர் மாரிச்செல்வம், கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரதாஸ் உள்பட பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
பாலமேடு பேரூராட்சி பகுதிகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை ஜே.சி.பி. எந்திரம் மூலம் அகற்றும் பணி நடந்தது. பாலமேடு பேரூராட்சி பகுதியில் பட்டா நிலங்கள், அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடங்கள், மதுரை, வலையபட்டி, வாடிப்பட்டி செல்லும் சாலை ஓரங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வரப்படுகிறது. தனியார் இடங்களில் எந்திரம் மூலம் சீமைக்கருவேலமரங்கள் அகற்றுவதற்கான செலவு தொகையை அந்தந்த இட உரிமையாளர்களிடம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இம்மாத கடைசியில் இந்த மரங்களை அகற்றுவதற்கு வேண்டிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
அலங்காநல்லூர் பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து சாலையோர பகுதியிலும் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன. அறிவிக்கப்பட்டபடி தனியார் இடங்களில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணிக்கான செலவு தொகைகளை இட உரிமையாளர்கள் உடனே செலுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் செயல் அலுவலர்கள் ஜூலான்பானு, பூங்கொடி முருகு, தலைமை எழுத்தர்கள் அங்கயற்கண்ணி, தேவி, தனலெட்சுமி, துப்புரவுபணி மேற்பார்வையாளர்கள் கனகராஜ், வாசிமலை, கல்யாணிசுந்தரம் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
மதுரை கீழமாத்தூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் ஆங்காங்கே பெரும் அளவில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் மூலம் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பகுதி பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப மாவட்ட நிர்வாகம் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியை விரைவில் முடித்திட துரித நடவடிக்கை எடுத்து வருகிறது.
வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 23 ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சீமைக்கருவேலமரங்கள் 100 வேலை திட்ட பணியாளர்கள், தொண்டு நிறுவனங்கள் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. தனியார் இடங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை உடனே அகற்ற வேண்டும், தவறும்பட்சத்தில் செலவு தொகையை இருமடங்காக வசூல் செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதில் வாடிப்பட்டி தாசில்தார் வீரபத்திரன், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் மீனாட்சி, கண்ணையா ஆகியோர் அறிவிப்பு விடுத்திருந்தனர். இதுகுறித்து கிராம, நகர் புறங்களில் பொதுமக்கள் கூடும் இடங்களில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டது. ஆண்டிபட்டி ஊராட்சி இந்திரா காலனியில் தனியார் இடத்தில் வளர்ந்திருந்த சீமைக்கருவேல மரங்களை வேருடன் அகற்றும் பணியினை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.