

சென்னை
அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், கடந்த ஜூலை மாதம் சிறப்பு தகுதித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. தங்களின் ஒவ்வொரு ஆண்டு அனுபவத்துக்கும் ஒரு கருணை மதிப்பெண் வழங்கும்படி ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிடக்கோரி தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பி. நடராஜன், என். செல்வன் உள்ளிட்ட பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, பொதுப்பிரிவு ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்களை குறைப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசு கொள்கை முடிவு எடுக்கவுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஆசியர்களுக்கு நடத்தப்பட்ட சிறப்பு தகுதித்தேர்வுக்கான முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதிக்கிறேன் என்று உத்தரவிட்டார்.
மனுதாரர்கள் இடைக்கால கோரிக்கை ஏதும் வைக்காத நிலையில், ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதான வழக்கில் இறுதி விசாரணைக்கு தயாராக இருப்பதால், தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், இந்த மனு நீதிபதி மும்மினேனி சுதீர் குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பு கோரிக்கையை ஏற்று, ஆசிரியர்களுக்கான சிறப்புத் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கியும், முடிவுகளை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுமதியளித்தும் உத்தரவிட்டார். மேலும், பணி அனுபவத்துக்கான ஒவ்வொரு ஆண்டுக்கும் தலா ஒரு கருணை மதிப்பெண் வழங்கக் கோரி ஆசிரியர்கள் தாக்கல் செய்த பிரதான வழக்கை வருகிற 7-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.