மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்: என்ஜினீயர் உள்பட 2 பேர் சாவு

அரூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் என்ஜினீயர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்: என்ஜினீயர் உள்பட 2 பேர் சாவு
Published on

அரூர்,

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள எலவடை கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மகன் சிங்காரவேலன் (வயது 23). கூலித்தொழிலாளி. இதேபகுதியை சேர்ந்தவர் மாது. இவருடைய மகன் அசோக்குமார் (23). என்ஜினீயர். நண்பர்களான இவர்கள் 2 பேரும் நேற்று மோட்டார் சைக்கிளில் அரூருக்கு சென்றனர். மோட்டார் சைக்கிளை சிங்காரவேலன் ஓட்டி செல்ல அசோக்குமார் பின்னால் அமர்ந்து சென்றார். மொரப்பூர்-அரூர் சாலையில் மோப்பிரிப்பட்டி புதூரில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகில் இவர்கள் சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது எதிரே வந்த லாரி எதிர்பாராதவிதமாக இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் சிங்காரவேலன், அசோக்குமார் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

டிரைவருக்கு வலைவீச்சு

இந்த விபத்து குறித்து அரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று விபத்தில் இறந்த 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான வெள்ளாளப்பட்டி ஜே.பி. நகரை சேர்ந்த லாரி டிரைவர் பாஸ்கரனை வலைவீசி தேடி வருகின்றனர்.

விபத்தில் இறந்த சிங்காரவேலனுக்கு திருமணமாகி நிஷா என்ற மனைவியும், 10 மாதத்தில் ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. அசோக்குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இறந்த 2 பேரின் உடல்களையும் பார்த்து உறவினர்கள் கதறி அழுதது அனைவரையும் கண்கலங்க வைத்தது. ஒரே கிராமத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் விபத்தில் இறந்ததால் அந்த பகுதி சோகத்தில் மூழ்கியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com