

மலைக்கோட்டை,
திருச்சி கோட்டை பகுதியில் உள்ள கீழ சிந்தாமணியை சேர்ந்தவர் நல்லதம்பி(வயது 47). இவர் தெப்பக்குளம் பகுதியில் தள்ளுவண்டியில் பானிபூரி வியாபாரம் செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் மோகன்குமார்(47). இவர் திருச்சி மாநகராட்சி முன்னாள் மேயர் புனிதவள்ளி பழனியாண்டியின் கார் டிரைவர் ஆவார். நல்லதம்பியும், மோகன்குமாரும் அடுத்தடுத்து இருந்த வீடுகளில் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை மின் கசிவு காரணமாக அவர்களுடைய வீடுகள் திடீரென தீ பிடித்து எரிந்தன. இதையறிந்து வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். அக்கம், பக்கத்தினர் உடனடியாக கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்கள், வீடுகளில் இருந்து வாளி மற்றும் குடங்களில் தண்ணீரை கொண்டு வந்து ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. மேலும் தீ வேகமாக பரவியது.
பொருட்கள் சேதம்
இந்நிலையில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் 2 வீடுகளும் தீயில் எரிந்து நாசமாகின. இதில் அந்த வீடுகளில் இருந்த மொத்தம் ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. இது குறித்து தகவல் அறிந்த அந்த பகுதி கிராம நிர்வாக அதிகாரி பத்மநாபன் அங்கு வந்து தீ விபத்தில் நாசமான வீடுகளை பார்வையிட்டார். கோட்டை போலீசார் இந்த தீ விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.