வேண்டிய வரம் அருளும் வைகாசி விசாக வழிபாடு!

கோவில்களுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே முருகப்பெருமானுக்கு எளிமையான முறையில் நைவேத்யம் படைத்து பூஜை செய்து வழிபடலாம்.
வேண்டிய வரம் அருளும் வைகாசி விசாக வழிபாடு!
Published on

தமிழ்க் கடவுள் முருகப்பெருமானை வழிபடுவதற்கு உகந்த நாட்களில் மிக முக்கியமான நாள் வைகாசி விசாகம். வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்தில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. பெரும்பாலான முருகன் கோவில்களில் வைகாசி விசாகம் 10 நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. வைகாசி விசாகத்தன்று பக்தர்கள் பால் குடம் மற்றும் காவடிகளை ஏந்தி முருகன் கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்வது வழக்கம்.

அவ்வகையில் இந்த ஆண்டு வைகாசி விசாகம் நாளை வருகிறது. இதையொட்டி கோவில்களில் திருவிழா களைகட்டி உள்ளது. பக்தர்கள் சாரை சாரையாக கோவில்களுக்கு சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்தவண்ணம் உள்ளனர்.

முருகப்பெருமானுக்கு எத்தனை விழாக்கள் எடுத்தாலும், வைகாசி விசாக விழாதான் வளர்ச்சியைக் கொடுக்கும் விழாவாக அமைகின்றது. விசாகத் திருநாளில் முருகனின் சன்னதிக்கு சென்று வழிபட்டால் வேண்டிய வரம் கிடைக்கும், தொடங்கிய செயல்களில் வெற்றி கிட்டும், விரும்பியது நடக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. வைகாசி விசாக நாளில் விரதமிருந்து, முருகப் பெருமானை வழிபடுவது இன்னும் சிறப்பு.

கோவில்களுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே முருகப்பெருமானுக்கு எளிமையான முறையில் நைவேத்யம் படைத்து பூஜை செய்து வழிபடலாம். வீட்டில் பூஜை செய்யும் இடத்தில் முருகப்பெருமானின் படத்தை வைத்து அரளி, செம்பருத்தி முதலான மலர்களைக் கொண்டு அலங்கரிக்கலாம்.

முருகப்பெருமானை வழிபடுவதற்கு உரிய மந்திரங்கள், பதிகங்கள் முதலானவற்றை பாராயணம் செய்யலாம். திருப்புகழ், கந்தசஷ்டி கவசம் படிக்கலாம். மந்திரங்கள், பதிகங்கள் தெரியாதவர்கள் கவலைப்பட தேவையில்லை. எளிமையாக 'ஓம்' என்ற பிரணவ மந்திரத்தையோ அல்லது முருகனுக்குரிய 'சரவண பவ' என்ற ஆறெழுத்து மந்திரத்தையே பக்தியுடன் உச்சரித்தால் போதும், ஆறுதலை தருவான் ஆறுமுகன்.

முருகப்பெருமானுக்கு சர்க்கரைப் பொங்கல் அல்லது எலுமிச்சை சாதம் நைவேத்தியமாக படைத்து பிரார்த்தனை செய்யலாம். ஏழை, எளிய மக்களுக்கு எலுமிச்சை சாதம் வழங்குவது நல்லது. குடை, செருப்பு, மோர், பானகம், தயிர் சாதம் முதலியவற்றை ஏழைகளுக்கு தானம் செய்தால் திருமண பேறு கிட்டும், குழந்தைபேறு உண்டாகும், குலம் தழைத்தோங்கும். வைகாசி விசாக விரதம் இருப்பவர்களுக்கு ஆபத்துகள் அகலும், அனைத்து செல்வங்களும் கிடைக்கப் பெறும் என்பது நம்பிக்கை. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com