பள்ளி மாணவன் பலி வேன் மோதியது

மயிலாடுதுறையில் வேன் மோதியதில் பள்ளி மாணவன் பலியானான்.
பள்ளி மாணவன் பலி வேன் மோதியது
Published on

மயிலாடுதுறை,

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவனுடைய தம்பிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பள்ளி மாணவன்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை ஆடியபிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. இவருடைய மகன்கள் ராகவன் (வயது7), ராகுல் (6). மயிலாடுதுறையில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் ராகவன் 2-ம் வகுப்பு படித்து வந்தான். ராகுல் 1-ம் வகுப்பு படித்து வருகிறான். இருவரும் தினமும் வீட்டில் இருந்து வேன் மூலம் பள்ளிக்கு செல்வது வழக்கம். வழக்கம்போல் நேற்று ராகவன், ராகுல் ஆகிய 2 பேரும் பள்ளிக்கு வேனில் சென்றனர்.

வேன் டிரைவர், பள்ளி இருக்கும் இடத்திற்கு சிறிது தொலைவுக்கு முன்பாக இருவரையும் இறக்கிவிட்டு சென்றதாக தெரிகிறது. இதையடுத்து 2 பேரும் பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு வேன், 2 பேர் மீதும் மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ராகவன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானான்.

படுகாயம் அடைந்த தம்பி

விபத்தில் படுகாயம் அடைந்த ராகவனின் தம்பி ராகுல், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேன் மோதி பள்ளி மாணவன் பலியான சம்பவம், மயிலாடுதுறை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com