ரே‌ஷன் கார்டுகளை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வரக்கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை

குமரி மாவட்டத்தில் தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட ரே‌ஷன்கார்டுகளுக்கு வேட்டி–சேலை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ரே‌ஷன் கார்டுகளை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வரக்கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை
Published on

இதனால் ரேஷன் கார்டுகளை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் பணியை துரிதப்படுத்தக்கோரி அட்டைதாரர்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தற்காலிக நீக்கம்

குமரி மாவட்டத்தில் பயன்பாட்டில் உள்ள ரேஷன் கார்டுகளில் ஆதார் அட்டை எண் மற்றும் செல்போன் எண் பதிவு செய்யப்படாத 30 ஆயிரம் வரையிலான ரேஷன் கார்டுகள் கடந்த சில மாதத்துக்கு முன் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து ஆதார் அடையாள அட்டை வைத்திருக்கும் ரேஷன் கார்டுதாரர்கள் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகங்களுக்குச் சென்று ஆதார் எண் மற்றும் செல்போன் எண்களை பதிவு செய்து தங்களது ரேஷன் கார்டுகளை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதனால் படிப்படியாக தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்ட ரேஷன் கார்டுகள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படுகின்றன. இதுவரை பல ஆயிரக்கணக்கான ரேஷன் கார்டுகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. மீதமுள்ள ரேஷன் கார்டுதாரர்களும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பொங்கல் பரிசு பெற முடியாமல்...

இத்தகைய சூழ்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசால் வழங்கப்படும் இலவச வேட்டிசேலைகள் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு ஆகியவற்றை தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்ட ரேஷன் கார்டு தாரர்களால் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தினமும் ஏராளமான ரேஷன் கார்டுதாரர்கள் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு சென்று தங்களது ரேஷன் கார்டுகளை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

வட்ட வழங்கல் அலுவலகத்தில் குறைவான ஊழியர்களே பணியில் ஈடுபட்டிருந்தாலும் அவர்களைக் கொண்டு ரேஷன் கார்டு தொடர்பான அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன் தற்காலிக நீக்க பட்டியலில் உள்ள ரேஷன்கார்டுகளை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் பணியையும் மேற்கொண்டு வருகிறார்கள்.

திடீர் போராட்டம்

இந்தநிலையில் அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் ரேஷன் கார்டுகளை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பணியை மேற்கொள்வதற்குரிய கம்ப்யூட்டர் மென்பொருள் நேற்று காலையில் இருந்து மதியம் வரை மாவட்ட வழங்கல் அலுவலகத்தால் லாக்` செய்யப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மதியம் வரை காத்திருந்த ரேஷன்கார்டுதாரர்கள், ரேஷன்கார்டுகளை செயல்பாட்டுக்கு கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டது.

அங்குள்ள ஊழியர்கள், கம்ப்யூட்டர் மென் பொருள் லாக் செய்யப்பட்டு இருப்பதால் இன்று (நேற்று) ரேஷன் கார்டுகளை செயல்பாட்டுக்கு கொண்டுவரும் பணியை மேற்கொள்ள முடியாது. எனவே நாளை (இன்று) வாருங்கள் என்று கூறியதாக தெரிகிறது. இதையடுத்து சுமார் 30க்கும் மேற்பட்டோர் அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் இருந்து கலெக்டர் அலுவலகத்தின் முன்புற பகுதிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலக போர்டிகோ முன் 5 நிமிடம் அமர்ந்து திடீர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது ரேஷன் கார்டுகளை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வட்ட வழங்கல் அலுவலக ஊழியர்கள் தங்களை இன்று வாருங்கள், நாளை வாருங்கள் என்று அலைக்கழிப்பதாகவும் கூறி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நடவடிக்கை

இதுபற்றிய தகவல் அறிந்த அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மாவட்ட வருவாய் அதிகாரியை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு வட்ட வழங்கல் அதிகாரியை சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தினர். அவர் இதுதொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தார். அதன்பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து, வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு சென்றனர்.

இதையடுத்து அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் ரேஷன் கார்டுகளை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்குரிய மென்பொருள் லாக்` அகற்றப்பட்டது. அதன்பிறகு தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டிருந்த ரேஷன் கார்டுகளில் ஆதார் பதிவு மேற்கொள்ளப்பட்ட கார்டுகளை பதிவு செய்து மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் பணி தொடர்ந்து நடந்தது. இந்த திடீர் போராட்டத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com