குடிநீர் பற்றாக்குறையை போக்க கலெக்டர் அலுவலகத்துக்கு காலிக்குடங்களுடன் வந்த கிராம மக்கள்

குடிநீர் பற்றாக்குறையை போக்க வலியுறுத்தி தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இதே போல் வறட்சி நிவாரணம் வழங்கக்கோரி விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
குடிநீர் பற்றாக்குறையை போக்க கலெக்டர் அலுவலகத்துக்கு காலிக்குடங்களுடன் வந்த கிராம மக்கள்
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்து வருகிறது. அதன்படி நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டி வடக்கு நாயுடு தெருவை சேர்ந்த கிராமமக்கள் 30-க்கும் மேற்பட்டவர்கள் தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு காலிக்குடங்களுடன் வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

எங்கள் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இது குறித்து கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம். இந்த நிலையில் ஆழ்குழாய் கிணறு மற்றும் மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி அமைக்க எம்.எல்.ஏ., தாசில்தார், வட்டார வளர்ச்சி அதிகாரி ஆகியோர் ஆய்வு செய்து ஏற்கனவே அரசால் கிணறு வெட்டி தண்ணீர் வழங்கி வந்த பொது இடத்தை தேர்வு செய்தனர்.

ஆக்கிரமிப்பு

இதையடுத்து அங்கு பணிகளை செய்ய முற்பட்ட போது அரசுக்கு சொந்தமான கிணற்றை சிலர் ஆக்கிரமித்து வைத்துக்கொண்டு தங்களுக்கு சொந்தமானது என கூறுகிறார்கள். எனவே தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்ட கிணற்றை கலெக்டர் மீட்டு ஆழ்குழாய் கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.

விவசாயிகள் மனு

தஞ்சை மாவட்டம் திருவையாறு தாலுகாவில் உள்ள வரகூர், கண்டமங்கலம், கலர்பட்டி, அம்மையகரம், விண்ணமங்கலம், பூதராயநல்லூர், கழுமங்கலம், பிரமன்பேட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகளும், தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கலெக்டரிடம் மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

எங்கள் பகுதியில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடி செய்திருந்தோம். தற்போது கடும் வறட்சியினால் சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து வறட்சி நிவாரணம் வழங்குவது தொடர்பாக அதிகாரிகள் கணக்கெடுத்தனர். ஆனால் இதுவரை வறட்சி நிவாரணம் வழங்கப்படவில்லை. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் உடனடியாக வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் அதில் கூறி இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com