

விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 2,602 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 31 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். 1,832 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 739 பேர் அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களில் நேற்று 500-க்கும் மேற்பட்டோரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் வந்தது. இதில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 164 பேருக்கு புதிதாக கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் திண்டிவனம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் பெண் இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர், திண்டிவனம் நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவு போலீஸ் ஏட்டு, விழுப்புரம் நகரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பணியாற்றி வரும் 2 மேலாளர்கள், கண்டாச்சிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை, திண்டிவனம் அரசு மருத்துவமனை டாக்டர், விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் 2 டாக்டர்கள், 11 ஊழியர்கள், திருவெண்ணைநல்லூர் அருகே இருவேல்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர், திண்டிவனத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் நகை மதிப்பீட்டாளர், விழுப்புரம் அருகே ராம்பாக்கம் கிராம சுகாதார செவிலியர், மரக்காணம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் உதவியாளர் உள்ளிட்டோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட 164 பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் விழுப்புரத்தில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனை, விழுப்புரம் மனிதவள சுகாதார மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் உள்ள தற்காலிக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,602-ல் இருந்து 2,766 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று ஒரே நாளில் 153 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுதவிர கொரோனா முன்னெச்சரிக்கை தொடர்பாக 340 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று ஒரே நாளில் 164 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் பலருக்கு அறிகுறியே இல்லாமல் நோய் தொற்று பரவியுள்ளது சுகாதாரத்துறையினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. தொற்று பரவலை தடுப்பதற்கான நடவடிக்கை பணியை மாவட்ட நிர்வாகம் மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா தொற்றால் 2,651 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 2,033 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 21 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். மற்றவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட 65 வயதுடைய முதியவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு:- கள்ளக்குறிச்சி அருகே விருகாவூரை சேர்ந்தவர் 65 வயதுடைய முதியவர். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதன் மூலம் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் நேற்று 320 பேரின் பரிசோதனை முடிவு வெளிவந்தது. இதில் கள்ளக்குறிச்சி நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் டாக்டர் உள்பட 182 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2833 ஆக உயர்ந்துள்ளது.