போக்குவரத்து விதிகளை மீறாத சிறந்த நகரமாக சென்னையை மாற்றி அமைக்க அதிரடி நடவடிக்கை - கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பேட்டி

போக்குவரத்து விதிகளை மீறாத சிறந்த நகரமாக சென்னையை மாற்றி அமைக்க அதிரடியாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.
போக்குவரத்து விதிகளை மீறாத சிறந்த நகரமாக சென்னையை மாற்றி அமைக்க அதிரடி நடவடிக்கை - கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பேட்டி
Published on

சென்னை,

சென்னை திருவான்மியூர் மார்க்கெட் பகுதியில் போக்குவரத்தை சீர்செய்யும் பொருட்டு அந்த பகுதி சாலையையும், கிழக்கு கடற்கரை சாலையையும் தத்துஎடுக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை அங்கு நடந்தது. போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பல்வேறு தரப்பினருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாற்றுத்திறனாளிகளுக்கு காய்கறி தொகுப்பு பைகளையும் வழங்கினார். விழாவில் அவர் போக்குவரத்து விழிப்புணர்வு வாகனத்தை கொடி அசைத்து தொடங்கிவைத்தார்.

பின்னர் அங்கு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

போக்குவரத்து விதிமுறைகளை மீறாத சிறந்த நகரமாக சென்னையை உருவாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதற்காக சாலைகளை தத்து எடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை திருவான்மியூர் பஸ் நிலைய சந்திப்பு, சென்டிரல் சந்திப்பு, அண்ணா வளைவு, மாதவரம் ரவுண்டானா ஆகிய 4 சாலை சந்திப்புகளில் அடுத்த ஒரு வாரத்துக்கு வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விதிமுறைகள் பற்றி சொல்லிக்கொடுத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இந்த ஒரு வாரமும் இந்த பகுதிகளில் அபராதம் வசூலிக்கப்படமாட்டாது.

ஒரு வாரம் கழித்து இந்த பகுதிகளில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற திட்டம் சென்னை முழுவதும் படிப்படியாக அமல்படுத்தப்படும். போக்குவரத்து விதிமுறை மீறல் இல்லாத சிறந்த நகரமாக சென்னை மாற்றி அமைக்கப்படும்.

நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் உறவினர்கள் மற்றும் அவரது கணவர் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடக்கிறது. விசாரணை முடிந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அடுக்குமாடி பார்க்கிங் வசதி உள்ளிட்ட பல்வேறு பார்க்கிங் வசதிகள் செய்து கொடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர் டாக்டர் கண்ணன், இணை கமிஷனர்கள் பாண்டியன், லட்சுமி, துணை கமிஷனர்கள் விக்ரமன், குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com