ஓட்டுப்போட சென்றபோது வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் பலர் ஏமாற்றம்

ஓட்டுப்போட சென்றபோது வாக்காளர் பட்டியலில் பெயர் மாயமாகி இருந்ததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
ஓட்டுப்போட சென்றபோது வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் பலர் ஏமாற்றம்
Published on

மும்பை,

பெயர்கள் மாயம்

மும்பை மாநகராட்சிக்கு தேர்தல் நேற்று நடந்தது. இதில், ஓட்டுப்போட சென்ற இடத்தில் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இல்லை என பலர் குற்றம்சாட்டினர். இதேப்போல தாங்கள் வாக்குச்சாவடி, வாக்குச்சாவடியாக அலைக்கழிக்கப்பட்டதாக ஒரு தரப்பு மக்கள் குற்றம் சாட்டினர். வாக்காளர் பட்டியலில் கணவர் பெயர் இருந்தும், மனைவி பெயர் மாயமான சம்பவங்களும் அரங்கேறின. வாக்காளர் பட்டியலில் சாதாரண மக்கள் மட்டுமின்றி பிரபலங்களின் பெயர்களும் மாயமாகி இருந்தன. இது குறித்து தாராவி பகுதியில் உள்ள ஹோலி மைதான வாக்குச்சாவடிக்கு ஓட்டுப்போட வந்த பெண் ஒருவர் கூறியதாவது:-

பொதுமக்கள் ஏமாற்றம்

முதலில் அருகில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கு ஓட்டுப்போட சென்றேன். அவர்கள், ஹோலிமைதான வாக்குச்சாவடியில் தான் எனக்கு ஓட்டு இருப்பதாக கூறி அனுப்பி வைத்தனர். இங்கு வந்து கேட்டால், மீண்டும் மாநகராட்சி பள்ளிக்கூடத்திற்கு போக சொல்கிறார்கள். வெயிலில் அங்கும், இங்கும் அலைந்து தலை வலிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தேவ்னார் பகுதியை சேர்ந்த 70 வயது இர்பான் கான் கூறும்போது, நான் கடந்த 45 ஆண்டுகளாக ஓட்டுப்போட்டு வருகிறேன். இன்று சிவாஜி சிலை அருகில் உள்ள வாக்குச்சாவடிக்கு ஓட்டுப்போட சென்றேன். அவர்கள் தேவ்னார் பார்ம் ரோடு பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு போகச்சொன்னார்கள். அங்கு எனது குடும்பத்தினர் பெயர் இருந்தது. ஆனால் எனது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என ஏமாற்றத்துடன் கூறினார்.

வார்டு சீரமைப்பு காரணமா?

இதேப்போல மும்பையின் பல இடங்களில் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இல்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர். மேலும் பொதுமக்கள் அங்கும், இங்கும் அலைக்கழிக்கப்பட்டனர். மும்பை மாநகராட்சி வார்டு எல்லைகள் இந்த தேர்தலுக்கு முன் சீரமைக்கப்பட்டன. அதுவே வாக்காளர் பட்டியலில் பலரின் பெயர் மாயமானதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com