ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் அலைமோதிய பொதுமக்கள்

காய்கறி கடைகளை திறந்ததால் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் அலைமோதிய பொதுமக்கள்
Published on

ஊட்டி,

காய்கறி கடைகளை திறந்ததால் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

பொதுமக்கள் கூட்டம்

ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் கடைகள் நெருக்கமாக உள்ளன. இங்கு அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அதிகரித்ததால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து காய்கறி கடைகள் மட்டும் காந்தி விளையாட்டு மைதானத்துக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில் ஊட்டியில் தொடர் மழையால் காந்தி விளையாட்டு மைதானம் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறியது. இதனால் வியாபாரிகள் தங்களது விற்பனை பொருட்களை பாதுகாக்க முடியாமல் பாதிக்கப்பட்டனர். மேலும் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

இதையடுத்து வியாபாரிகள் கடைகளை மீண்டும் மார்க்கெட்டுக்கு மாற்ற முடிவு செய்தனர்.இந்த நிலையில் நேற்று காய்கறி கடைகள் நகராட்சி மார்க்கெட்டில் காலை 6 மணி முதல் 10 மணி வரை செயல்பட்டது.

ஏ, பி என சுழற்சி முறையில் கடைகளை திறக்காமல் தொடர்ச்சியாக கடைகளை திறந்ததால் மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. கடைக்கு வந்தவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் கொரோனா பரவும் இடமாக மாறிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது.

இன்று முதல் இடமாற்றம்

இதை அறிந்த ஊட்டி நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி, துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், தாசில்தார் குப்புராஜ் ஆகியோர் மார்க்கெட் கடைகளில் ஆய்வு நடத்தி சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தினர். இருப்பினும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

இதைதொடர்ந்து அதிகாரிகள் வியாபாரிகளுடன் கடைகளை இடமாற்றம் செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். நகராட்சி மார்க்கெட்டில் பூ கடைகள் திறக்க அனுமதி இல்லை.

நடைபாதைகளில் கடைகளை திறக்கக்கூடாது. காய்கறி கடைகள் திறந்ததால் மக்கள் கூட்டம் அதிகரித்து உள்ளது. எனவே, காய்கறி கடைகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று அதிகாரிகள் கூறினர்.

இதற்கு வியாபாரிகள் காய்கறி கடைகள் மட்டும் ஊட்டி மத்திய பஸ் நிலையம், ஏ.டி.சி. ஆகிய 2 பகுதிகளில் இன்று (புதன்கிழமை) முதல் மாற்றப்படும் என்று உறுதி அளித்தனர். அங்கு சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com