

சென்னை,
தாய் மொழி விழா
உலக தாய் மொழி விழா நேற்று அனைத்து நாடுகளில் கொண்டாடப்பட்டது. சென்னையில் ராணி மேரி கல்லூரியில் தாய் மொழி விழா தமிழ் மொழி விழாவாக நடத்தப்பட்டது. கல்லூரியின் முதல்வர் ராஜசுலோச்சனா தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக வருமான வரித்துறை அதிகாரி பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு பேசியதாவது:-
உலகில் மிகத்தொன்மை வாய்ந்த மொழி தமிழ் மொழி. உலக பொதுமறையாம் திருக்குறளை தந்தது தமிழ் மொழி. திருக்குறளை உலகில் முக்காலத்திற்கும் ஏற்ற வகையில் திருவள்ளுவர் எழுதி உள்ளார்.
தமிழில் நடத்துங்கள்
5-ம் வகுப்பு வரை உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் விழா ஆங்கிலத்தில் நடத்தப்பட்டது. விழாவில் என்ன பேசுகிறார்கள் என்று புரியாமல் பல பெற்றோர் உட்கார்ந்து இருந்தனர். இவ்வாறு விழா நடத்துவதால் பயன் இல்லை. நாம் என்ன கருத்து கூறுகிறோமோ அது அனைவருக்கும் புரிய வேண்டும். நம்மிடம் பிற மொழிகள் திணிக்கப்படுகின்றன.
தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் விழாக்கள், நிகழ்ச்சிகள் தமிழில் நடத்தப்பட வேண்டும். தமிழ் தரணி ஆளும். அதற்குண்டான திறமை தமிழ் மொழிக்கு உண்டு.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் பக்தவச்சலம் நினைவு கல்லூரி முன்னாள் முதல்வர் பிரேமா, ராணி மேரி கல்லூரி உதவி பேராசிரியை சுகுணா சந்திரகாந்தாமணி உள்பட பலர் பேசினர். முன்னதாக பேராசிரியர் கலைவாணி வரவேற்றார். முடிவில் உதவி பேராசிரியை ஜெயா நன்றி கூறினார்.