கள்ளக்காதலை கண்டித்ததால் ஆத்திரம் மனைவி கழுத்தை இறுக்கி கொலை


கள்ளக்காதலை கண்டித்ததால் ஆத்திரம் மனைவி கழுத்தை இறுக்கி கொலை
x
தினத்தந்தி 28 May 2017 11:30 PM GMT (Updated: 28 May 2017 8:03 PM GMT)

கள்ளக்காதலை கண்டித்ததால், மனைவியின் கழுத்தை இறுக்கி கொலை செய்த கணவர், எழும்பூர் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

ஆலந்தூர்,

சென்னை துரைப்பாக்கம் அடுத்த கண்ணகிநகர் எழில் நகர் பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் பாரத்(வயது 34). பெயிண்டர். இவருடைய மனைவி மோனிஷா(30). துப்புரவு தொழிலாளி.

இவர்கள் இருவரும் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 5 வயதில் ஜெனித் அஸ்வின் என்ற மகன் உள்ளான்.

கள்ளக்காதல்

பாரத்துக்கு கண்ணகிநகர் பகுதியை சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த மோனிஷா, அந்த பெண்ணுடனான கள்ளக்காதலை கைவிடும்படி தனது கணவரை கண்டித்தார். ஆனால் அவர், அதை கேட்காமல் அந்த பெண்ணுடன் தொடர்ந்து பழகி வந்தார். இதனால் கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த 22–ந்தேதி இரவு வீட்டில் மோனிஷா, பாரத் மட்டும் தனியாக இருந்தனர். அஸ்வினை மோனிஷாவின் தாயார் வீட்டுக்கு அனுப்பி இருந்ததாக கூறப்படுகிறது. தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள மனைவி மீது ஆத்திரத்தில் இருந்து வந்த பாரத், அவரை கொலை செய்ய திட்டமிட்டார்.

கழுத்தை இறுக்கினார்

அதன்படி வீட்டில் இருந்த வயரை எடுத்து, அங்கு தூங்கிக் கொண்டிருந்த மோனிஷாவின் கழுத்தை இறுக்கினார். இதில் அவர் மயங்கி விட்டார். இதனால் அவர் இறந்து விட்டதாக நினைத்த பாரத், அக்கம் பக்கத்தினரிடம் தனது மனைவி தற்கொலை செய்து கொண்டதாக கூறினார். இதேபோல் மோனிஷாவின் தாயாருக்கும் செல்போனில் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, மோனிஷா மயங்கி கிடப்பதை அறிந்து அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள், மோனிஷாவின் கழுத்தை இறுக்கி கொலை செய்ய முயற்சி நடந்து இருப்பதாக தெரிவித்தனர். இதனால் பயந்து போன பாரத், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

ஆஸ்பத்திரியில் சாவு

மோனிஷாவுக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் இரவு மோனிஷா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கண்ணகிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான பாரத்தை தேடி வந்தனர்.

இதற்கிடையில் போலீசார் தன்னை தேடுவதை அறிந்த பாரத், நேற்று எழும்பூர் கோர்ட்டில் சரண் அடைந்தார்.


Next Story