நாமக்கல்லில் விவசாயிகள் சங்கத்தினர் சாலைமறியல் 23 பேர் கைது


நாமக்கல்லில் விவசாயிகள் சங்கத்தினர் சாலைமறியல் 23 பேர் கைது
x
தினத்தந்தி 27 Sep 2017 11:00 PM GMT (Updated: 27 Sep 2017 9:26 PM GMT)

நாமக்கல்லில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினர் 23 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்,

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில், மின் இணைப்பு கேட்டு காத்திருக்கும் விவசாயிகளுக்கு உடனடியாக மும்முனை மின்இணைப்பு வழங்க வேண்டும். கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும். எருமைப்பாலுக்கு லிட்டர் ரூ.45, பசும்பாலுக்கு லிட்டர் ரூ.35 என கொள்முதல் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

விவசாயிகளின் அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும், 60 வயதான விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். மேட்டூர் அணையின் உபரி நீரை கால்வாய் அமைத்து மாவட்டம் முழுவதும் உள்ள ஏரி மற்றும் குளங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி நாமக்கல் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு சாலைமறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

இதில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினரும் கலந்து கொண்டனர்.

23 பேர் கைது

இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராஜூ தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பெருமாள், ஒன்றிய செயலாளர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 23 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் வேனில் ஏற்றி செல்லப்பட்டு திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர். 

Related Tags :
Next Story