என் அம்மாவுக்கு கிடைக்காமல் சொத்து முழுவதும் மாமாவுக்கே சென்றுவிட்டதால் கொன்றேன் விவசாயி கொலை வழக்கில் கைதான வாலிபர் வாக்குமூலம்


என் அம்மாவுக்கு கிடைக்காமல் சொத்து முழுவதும் மாமாவுக்கே சென்றுவிட்டதால் கொன்றேன் விவசாயி கொலை வழக்கில் கைதான வாலிபர் வாக்குமூலம்
x
தினத்தந்தி 21 Nov 2017 11:15 PM GMT (Updated: 21 Nov 2017 7:40 PM GMT)

‘என் அம்மாவுக்கு கிடைக்காமல் சொத்து முழுவதும் மாமாவுக்கே சென்றுவிட்டதால் வெட்டிக்கொன்றேன்‘ என்று விவசாயி கொலை வழக்கில் கைதான வாலிபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

நம்பியூர்,

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள செம்மாம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 45). விவசாயி. இவருடைய மனைவி ருக்மணி (32). இவர்களுக்கு துரைசாமி (10), மோகன்குமார் (4) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

கடந்த 19–ந் தேதி இரவு தோட்டத்து வீட்டு திண்ணையில் கட்டில் போட்டு பழனிச்சாமியும், மூத்த மகன் துரைசாமியும் தூங்கிக்கொண்டு இருந்தனர். வீட்டின் உள்ளே மனைவி ருக்மணியும் மற்றொரு மகன் மோகன்குமாரும் படுத்திருந்தனர்.

அப்போது நள்ளிரவில் வீட்டுக்கு வந்த ஒரு மர்ம நபர் தான் கொண்டு வந்த அரிவாளால் கட்டிலில் படுத்து தூங்கிக்கொண்டிருந்த பழனிச்சாமியை வெட்டினார். இதில் படுகாயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பழனிச்சாமி பிணமானார். அருகில் படுத்திருந்த அவருடைய மகன் துரைசாமி திடுக்கிட்டு எழுந்து சத்தம் போட்டு அலறி கத்தினான். உடனே அந்த நபர், துரைசாமியையும் அரிவாளால் வெட்டினார். இதில் சிறுவனுக்கும் காயம் ஏற்பட்டது. அதன்பின்னர் அந்த மர்ம நபர் அங்கிருந்து ஓடிவிட்டார்.

சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்த ருக்மணி, மோகன்குமாரும் கதவை திறந்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். அக்கம் பக்கத்தினரும் அங்கு ஓடி வந்தார்கள். அதன்பின்னர் அங்கிருந்தவர்கள் துரைசாமியை கோபி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் வரப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பழனிச்சாமியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனிச்சாமியை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய மர்மநபரை வலைவீசி தேடி வந்தார்கள்.

போலீஸ் விசாரணையில் பழனிச்சாமியை கொலை செய்தது அதே பகுதியில் வசிக்கும் அவருடைய அக்காள் மகன் சதீஷ்குமார் (24) என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் சதீஷ்குமாரை தேடிப்பிடித்து விசாரித்தார்கள். அப்போது மாமா பழனிச்சாமியை கொலை செய்ததை சதீஷ்குமார் ஒப்புக்கொண்டார். அப்போது போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலம் வருமாறு:–

‘என்னுடைய தாத்தா சொந்தமாக 10 ஏக்கர் நிலம் வைத்திருந்தார். அவருக்கு பின் என்னுடைய அம்மாவுக்கும், என் மாமா பழனிச்சாமிக்கும் சொத்து சரிபாதியாக பிரித்து தருவார் என்று நினைத்திருந்தேன். ஆனால் என்னுடைய தாத்தா 10 ஏக்கர் நிலத்தையும் மாமா பழனிச்சாமி பெயருக்கு எழுதிவைத்துவிட்டு இறந்துவிட்டார். என் அம்மாவுக்கு கிடைக்காமல் சொத்து முழுவதும் மாமாவுக்கே சென்றதால், ஆத்திரத்தில் அவரை அரிவாளால் வெட்டிக்கொன்றேன். அப்போது சத்தம் கேட்டு விழித்துக்கொண்ட அவருடைய மகனையும் வெட்டினேன்‘

இவ்வாறு சதீஷ்குமார் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

அதைத்தொடர்ந்து போலீசார் சதீஷ்குமாரை கைது செய்து, கோபி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சொத்துக்காக சொந்த மாமாவையே அக்காள் மகன் வெட்டிக்கொன்றது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story