துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ம.க. நிலைப்பாடு என்ன? டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேட்டி


துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ம.க. நிலைப்பாடு என்ன? டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேட்டி
x
தினத்தந்தி 24 July 2017 10:45 PM GMT (Updated: 24 July 2017 6:36 PM GMT)

டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ம.க.வின். நிலைப்பாடு என்ன? என்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

முன்னாள் மத்திய மந்திரியும், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான வேலு எழுதிய ‘என் வாழ்க்கைப் பயணம்’ என்ற தன் வரலாற்று நூல் (சுயசரிதை) வெளியீட்டு விழா சென்னை சி.ஐ.டி. காலனியில் உள்ள கவிக்கோ அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார்.

‘என் வாழ்க்கைப் பயணம்’ நூலை டாக்டர் ராமதாஸ் வெளியிட, அதன் முதல் பிரதியை வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜி.விஸ்வநாதன் பெற்றுக்கொண்டார். விழாவில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., எழுத்தாளர் சா.கந்தசாமி, கவிஞர் ஜெயபாஸ்கரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

மிக கொடிய விளைவுகளை ஏற்படுத்தும் பெட்ரோ கெமிக்கல் திட்டத்தை நாகை மற்றும் கடலூரில் செயல்படுத்த, மத்திய அரசின் மிரட்டல்களுக்கு பணிந்து தமிழக அரசு அனுமதித்திருக்கிறது.

விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சினை என்பதால் பா.ம.க. ஒருபோதும் அதை அனுமதிக்காது. இதை தடுக்கும் வகையில் விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்துவோம். தமிழகத்தில் முதுகெலும்பு இல்லாத ஆட்சி இருக்கிறது. பணம் சம்பாதிப்பது மட்டுமே அவர்களின் நோக்கம். மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது இல்லை.

துணை ஜனாதிபதி தேர்தலில் எங்களுடைய நிலைப்பாடு என்ன? என்பது குறித்து கட்சியின் உயர்நிலைக்குழு கூடி விரைவில் அறிவிக்கும்.

அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைந்து ஜனாதிபதி தேர்தலில் ஒருமித்த கருத்துடன் தமிழக பிரச்சினைகளை வலியுறுத்தியிருந்தால் தீர்வு ஏற்பட்டிருக்கும். தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் சுயநல கட்சிகள். அவர்களுடைய பிரச்சினைகளை மட்டும் பார்க்கிறார்கள். தமிழக மக்களின் பிரச்சினைகளுக்கு அவர்கள் போராடுவது இல்லை.  இவ்வாறு அவர் கூறினார்.


Next Story