அன்னிய செலாவணி மோசடி செய்ததாக டி.டி.வி.தினகரன் மீதான வழக்கு விசாரணை


அன்னிய செலாவணி மோசடி செய்ததாக டி.டி.வி.தினகரன் மீதான வழக்கு விசாரணை
x
தினத்தந்தி 16 Aug 2017 11:15 PM GMT (Updated: 16 Aug 2017 4:31 PM GMT)

டி.டி.வி. தினகரன் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கு விசாரணையின் போது அரசு தரப்பு சாட்சியை ஆஜர்படுத்த அமலாக்க துறையினர் கால அவகாசம் கோரியதால் நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

சென்னை,

அ.தி.மு.க. (அம்மா) அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மீது சென்னை எழும்பூர் 2–வது பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டில், 2 அன்னிய செலாவணி மோசடி வழக்குகள் அமலாக்கப் பிரிவால் தொடரப்பட்டது. இந்த 2 வழக்குகளிலும் டி.டி.வி.தினகரன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

இதில் ஒரு வழக்கான, இங்கிலாந்து நாட்டில் உள்ள பார்க்லே வங்கியில் 1 கோடியே 93 லட்சத்து 313 ஆயிரம் அமெரிக்க டாலரை முறைகேடாக டெபாசிட் செய்தது தொடர்பான வழக்கு நேற்று எழும்பூர் கோர்ட்டில் நீதிபதி மலர்மதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது டி.டி.வி.தினகரன் கோர்ட்டில் ஆஜராகி இருந்தார்.

விசாரணையின் போது அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வக்கீல், குறுக்கு விசாரணைக்காக அரசு தரப்பு சாட்சியை ஆஜர்படுத்த காலஅவகாசம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அதற்கு நீதிபதி, ‘இந்த வழக்கில் வருகிற 31–ந் தேதிக்குள் குறுக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் அமலாக்க துறையினரே கால அவகாசம் கேட்டால் வழக்கை எப்படி விரைந்து முடிக்க முடியும்’ என்று கேள்வி எழுப்பினார். பின்னர், அமலாக்க துறையினர் கால அவகாசம் கேட்டதற்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

இதன்பின்பு, குறுக்கு விசாரணைக்காக வழக்கின் விசாரணையை வருகிற 28–ந் தேதிக்கு தள்ளி வைப்பதாகவும், அன்றைய தினம் அமலாக்கத் துறையினர் தங்கள் தரப்பு சாட்சியை கண்டிப்பாக ஆஜர்படுத்த வேண்டும் என்றும், டி.டி.வி.தினகரன் தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை நடத்த தயாராக வர வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story