பாகிஸ்தானில் லாகூர் தொகுதி இடைத்தேர்தலில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு


பாகிஸ்தானில் லாகூர் தொகுதி இடைத்தேர்தலில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு
x
தினத்தந்தி 18 Sept 2017 3:45 AM IST (Updated: 17 Sept 2017 11:23 PM IST)
t-max-icont-min-icon

‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப்பை தகுதி நீக்கம் செய்து, பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஜூலை மாதம் 28–ந் தேதி உத்தரவிட்டது.

இஸ்லாமாபாத்,

‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப்பை தகுதி நீக்கம் செய்து, பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஜூலை மாதம் 28–ந் தேதி உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து காலியான லாகூர் பாராளுமன்ற தொகுதிக்கு செப்டம்பர் மாதம் 17–ந் தேதி (நேற்று) இடைத்தேர்தல் நடத்தப்படும் என அந்த நாட்டின் தேர்தல் கமி‌ஷன் அறிவித்தது.

இந்த தேர்தலில் ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி சார்பில், நவாஸ் ஷெரீப்பின் மனைவி குல்சூம் நவாஸ், பாகிஸ்தான் தெக்ரீக் இ இன்சாப் கட்சியின் தரப்பில் யாஸ்மின் ரஷீத், பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் பைசல் மிர் உள்பட மொத்தம் 44 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

3 லட்சத்து 21 ஆயிரத்து 786 வாக்காளர்களுக்காக 220 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

குல்சூம் நவாஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, லண்டன் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டு, ஓய்வில் உள்ளதால் அவரது சார்பில் மகள் மரியம் நவாஸ் தீவிர பிரசாரம் செய்தார்.

இந்த தேர்தலில், பலத்த பாதுகாப்புடன் காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. மாலை 5 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்தது.

மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து ஓட்டு போட்டனர். ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. பாகிஸ்தான் வரலாற்றில் முதல் முறையாக, ‘பயோமெட்ரிக் ஓட்டர் வெரிபிகேசன் மெஷின்’ பயன்படுத்தப்பட்டது.

இந்த தேர்தலில் குல்சூம் நவாஸ் வெற்றி பெற்றால், அவர் பிரதமர் பதவியை ஏற்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

1 More update

Next Story