பயங்கரவாதிகளை ஒழிப்பது குறித்த மோடியின் பேச்சு தொடர்பாக அமெரிக்கா கருத்து


பயங்கரவாதிகளை ஒழிப்பது குறித்த மோடியின் பேச்சு தொடர்பாக அமெரிக்கா கருத்து
x

Image Courtesy : AFP

பயங்கரவாதிகள் அவர்களது இருப்பிடத்திலேயே அழிக்கப்படுகிறார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

வாஷிங்டன்,

கடந்த 11-ந்தேதி உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக பா.ஜ.க. அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், பயங்கரவாதிகள் அவர்களது இருப்பிடத்திலேயே அழிக்கப்படுகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

அதே போல் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், "பயங்கரவாதம் மூலம் இந்தியாவை நிலைகுலைய வைப்பதற்கு பாகிஸ்தான் முயன்றால் அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும். பயங்கரவாதத்தை பாகிஸ்தான் கட்டுப்படுத்த வேண்டும். பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியாவின் உதவி தேவைப்பட்டால், அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளோம்" என்று கூறினார்.

இந்த நிலையில், பயங்கரவாதிகளை அவர்களது இருப்பிடத்திலேயே அழிப்பது தொடர்பான பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கின் பேச்சு குறித்து அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அவர், "அமெரிக்க அரசு இந்த விவகாரத்தில் தலையிடப் போவதில்லை. இருப்பினும், இந்த விவகாரத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசுகள் இணைந்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயல வேண்டும்" என்று தெரிவித்தார்.

மேலும் அமெரிக்காவில் வசிக்கும் காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் மீதான கொலை முயற்சி விவகாரத்தில் இந்தியா மீது அமெரிக்க அரசு ஏன் எந்த தடையும் விதிக்கவில்லை? என்ற கேள்விக்கு பதிலளித்த மேத்யூ மில்லர், "தடைகள் விதிப்பது தொடர்பாக வெளிப்படையாக எதையும் விவாதிக்க முடியாது" என்று குறிப்பிட்டார்.


Next Story