வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஆதியோகி சிலை கின்னஸ் சாதனை படைத்தது
கோவையில் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள 112 அடி உயரம் கொண்ட ஆதியோகி சிலை கின்னஸ் சாதனை படைத்து உள்ளது.
கோவை,
கோவையை அடுத்த வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் ஈஷா யோகா மையம் உள்ளது. இந்த மையத்துக்கு உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் வந்து யோகா பயிற்சி பெற்று செல்கிறார்கள். ஈஷா அறக்கட்டளை சார்பில் இந்த யோகா மையம் அருகில் 112 அடி உயரம் கொண்ட ஆதியோகி மார்பளவு சிலை அமைக்கப்பட்டது.
இந்த சிலை திறப்பு விழா கடந்த பிப்ரவரி மாதம் 24–ந் தேதி நடந்தது. இதில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்தார். விழாவில் பல்வேறு நாடுகளில் இருந்தும், தமிழகம், ஆந்திரா, கேரளா மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த சிலை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளது.
இது குறித்து ஈஷா அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
வடிவமைக்க 2½ ஆண்டுகள்வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் 112 அடி 4 அங்குல உயரமும், 81 அடி 11.8 அங்குலம் அகலமும், 147 அடி 3.7 அங்குலம் நீளமும் கொண்ட ஆதியோகியின் மார்பளவு சிலையை வடிவமைக்க 2½ ஆண்டுகள் ஆனது. அதை நிறுவ 8 மாதங்கள் பிடித்தது.
யோகி என்றால் இந்த உலகம் முழுவதையும் தன்னுள் ஒரு பாகமாக உணர்ந்தவர் என்று பொருள். எல்லாவற்றையும் தனக்குள் உள்ளடக்கிய ஒரு யோகியை சிவனுக்கு சமமாக இருப்பவர் என்று கருதலாம். யோகப் பாதையில் சிவன்தான் முதல் யோகி, ஆதியோகி. ஏனென்றால், அவர் எல்லையில்லா தன்மையை உணர்ந்திருந்தார். அவரின் வழியில் வந்தவர்கள் இந்த உலகிற்கு யோகாவை பரப்பினார்கள்.
112 அடி உயரம்ஒரு மனிதன் தனக்குள் விடுதலை அடைய என்னென்ன வழிமுறைகள் உள்ளனவோ அவை அனைத் தையும் ஆதியோகி அளித்துள்ளார். மனித உடலில் 114 சக்தி மையங்கள் உள்ளன. அதில் 2 மையங்கள் உடலுக்கு வெளியே உள்ளது. உடலுக்குள் இருக்கும் 112 சக்தி மையங்களை உபயோகித்து ஒருவர் எவ்வாறு முக்தி அடைய முடியும் என்பதை ஆதியோகியான சிவன் விவரித்து உள்ளார்.
மனித விழிப்புணர்வை உயர்த்துவதற்கும், தேவையான சக்திவாய்ந்த கருவிகளையும் ஒரு மனிதன் அடைய அனைத்து வழிமுறைகளையும் ஆதியோகி வழங்கி உள்ளார். இதுவே யோகா என்று அறியப் படும் கலாசாரத்தை உருவாக்கி இருக்கிறது. அவர் வழங்கிய 112 வழி முறைகளை குறிக்கும் வகையில் தான் 112 அடி உயர சிவனின் முகத்தோற்றத்தில் இந்த சிலை அமைக்கப்பட்டது.
கின்னஸ் சாதனைஇது போன்று உயரம் கொண்ட மார்பளவு சிலை உலகத்தில் எங்கேயும் இல்லை. எனவே இந்த சிலை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று சாதனை படைத்து உள்ளது. அதற்கான அறிவிப்பையும் கின்னஸ் நிறுவனம் வெளியிட்டு உள்ளது. இது எங்களுக்கு அளவில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் நமது நாட்டில் 3 இடங்களில் இது போன்று 112 அடி உயரத்துக்கு முகங்கள் சிலை அமைக்க உள்ளோம். கின்னஸ் சாதனை படைத்த இந்த சிலையை தினமும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். இதன் மூலம் அவர்கள் சிவனையும், யோகாவையும் உணர முடிகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.