பா.ஜ.க.வுடன் கூட்டணி; சந்திரபாபு நாயுடுவின் சைக்கிள் துருப்பிடித்துவிட்டது - ஜெகன் மோகன் ரெட்டி விமர்சனம்


பா.ஜ.க.வுடன் கூட்டணி; சந்திரபாபு நாயுடுவின் சைக்கிள் துருப்பிடித்துவிட்டது - ஜெகன் மோகன் ரெட்டி விமர்சனம்
x

சந்திரபாபு நாயுடுவின் சைக்கிள் சீராக இயங்காததால் அவர் மத்திய கட்சிகளின் ஆதரவைப் பெற டெல்லி சென்றார் என ஜெகன் மோகன் ரெட்டி விமர்சித்துள்ளார்.

அமராவதி,

ஆந்திர பிரதேச மாநிலத்தில் மொத்தம் 175 சட்டமன்ற தொகுதிகளும், 25 மக்களவை தொகுதிகளும் உள்ளன. அங்கு இந்த ஆண்டு ஒரே சமயத்தில் நாடாளுமன்ற தேர்தலும், சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் மக்களவை தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, நடிகர் பவன் கல்யாண் தலைமையிலான ஜன சேனா கட்சி மற்றும் பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளன.

கூட்டணி தொடர்பாக டெல்லியில் அமித்ஷா மற்றும் ஜே.பி.நட்டா ஆகியோருடன் சந்திரபாபு நாயுடு பேச்சுவார்த்தை நடத்தினார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, ஆந்திர பிரதேச மாநிலம் மிகவும் மோசமாக அழிக்கப்பட்டுள்ளதாகவும், பா.ஜ.க.வும், தெலுங்கு தேசம் கட்சியும் ஒன்றிணைவது நாட்டிற்கும், மாநிலத்திற்கும் வெற்றிகரமான சூழ்நிலையை உருவாக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சந்திரபாபு நாயுடுவின் சைக்கிள்(தெலுங்கு தேசம் கட்சியின் சின்னம்) துருப்பிடித்துவிட்டதாக ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி விமர்சித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் சைக்கிள் சங்கிலி சீராக இயங்கவில்லை. சந்திரபாபு நாயுடுவின் சைக்கிள் துருப்பிடித்துவிட்டது. எனவே மத்திய கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்காக அவர் டெல்லிக்கு சென்றார். அவர்களின் கூட்டணியை எதிர்த்து போராட தயாராக உள்ளோம். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எப்போதும் சமூகத்தில் பலவீனமான பிரிவினருக்கு துணை நிற்கும்" என்று தெரிவித்தார்.


Next Story