"முடக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வங்கி கணக்குகள்..." - வருமான வரித்துறை அதிரடி


முடக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வங்கி கணக்குகள்... - வருமான வரித்துறை அதிரடி
x

முறைகேடு செய்த பணம் பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வங்கி கணக்கை வருமான வரித்துறை அதிரடியாக முடக்கி உள்ளது.

திருச்சூர்,

கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள ஒரு வங்கியில், மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு தனித்தனியாக 5 கணக்குகள் உள்ளன. இந்த கணக்குகளில், கருவண்ணூர் கூட்டுறவு வங்கியில் முறைகேடு செய்த ரூ.3.80 கோடி இருப்பதாகவும், பலமுறை வங்கி கணக்குகளில் பண பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும் புகார் எழுந்தது.

அதன் பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் அந்த வங்கியில் நேற்று முன்தினம் திடீரென சோதனை நடத்தினர். 5 பேர் அடங்கிய வருமான வரித்துறையினர் மதியம் முதல் நள்ளிரவு வரை சோதனை மேற்கொண்டனர்.

அந்த நேரத்தில் வங்கியில் உள்ள அதிகாரிகள், ஊழியர்கள் யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. கம்யூனிஸ்டு கட்சியின் வங்கி கணக்குகளை தணிக்கை செய்தனர்.

இதுதொடர்பாக கொச்சி அமலாக்கத்துறை அலுவலகத்தில், திருச்சூர் மாவட்ட செயலாளர் எம்.எம்.வர்கிஸ் என்பவரிடம் அமலாக்கத்துறை, வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர். இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறும்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வங்கி கணக்கில் அதிக தொகை வரவு வைக்கப்பட்டு, பலமுறை கையாளப்பட்டு உள்ளது. அதுகுறித்து வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. இதுகுறித்து கட்சி நிர்வாகி அளித்த பதில் திருப்திகரமாக இல்லை என்றனர்.

சோதனைக்கு பின்னர் அந்த வங்கியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பெயரில் இருந்த 5 வங்கி கணக்குகளையும் வருமான வரித்துறை அதிரடியாக முடக்கியது.

கருவண்ணூர் கூட்டுறவு வங்கியில் நடந்த முறைகேடு குறித்து அமலாக்கத்துறை, வருமான வரித்துறையினர் ஏற்கனவே விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story