தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த அனுமதி - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதியளித்துள்ளது.
டெல்லி,
புதுடெல்லி, கடந்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி காந்திஜெயந்தி ஆண்டு தமிழகத்தில் 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பாக பேரணி நடத்த உயர்நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடம் அனுமதி வழங்கியிருந்தது. அதற்கு ஏற்கனவே தமிழ்நாடு காவல்துறை சார்பாக அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நீதிமன்றத்தை நாடி இருந்தனர்.
இதனை அடுத்து 6 இடங்களை தவிர மற்ற 44 இடங்களில் பாதுகாப்புடன் உள்ளரங்கு கூட்டமாக நடத்துவதற்கு தனி நீதிபதி அனுமதிவழங்கியிருந்தார். எனினும் சுற்றுசுவருக்குள் நடத்தவேண்டும் என்ற கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பாக சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அப்போது அந்த வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் அமர்வு, பொது சாலைகளில் பேரணி நடத்துவது என்பது அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை, அதுமட்டும் அல்லாமல் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது என்றால் அதனை சரிசெய்யவேண்டியது காவல்துறையினரின் கடமை எனவே ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அணிவகுப்பு நடத்துவதற்கு தேவையான பாதுகாப்பை வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டு, பேரணி நடத்துவதற்க்கு சென்னை ஐகோர்ட்டு அனுமதிவழங்கியது.
இந்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கடந்த மார்ச் மாதம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த அனுமதியளித்து சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை உறுதி செய்த சுப்ரீம் கோர்ட்டு தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டில் விரைவில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.






