அமித்ஷா இன்று நாகர்கோவில் வருகை; பலத்த பாதுகாப்பு ஏற்பாடு


அமித்ஷா இன்று நாகர்கோவில் வருகை; பலத்த பாதுகாப்பு ஏற்பாடு
x
தினத்தந்தி 7 March 2021 1:00 AM GMT (Updated: 2021-03-07T06:30:08+05:30)

மத்திய மந்திரி அமித்ஷா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாகர்கோவில் வருகிறார். அவரது வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அமித்ஷா வருகை
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாகர்கோவில் வருகிறார். அவர் காலை 10 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவில் மறவன்குடியிருப்பு பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் வந்திறங்குகிறார். பின்னர் 10.10 மணிக்கு அங்கிருந்து சுசீந்திரம் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். 10.35 மணிக்கு சுசீந்திரம் நகர மக்களிடம் ‘வெற்றிக்கொடி ஏந்தி வெல்வோம்’ என்ற நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பா.ஜனதா கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.

பின்னர் நாகர்கோவில் வரும் அவர் 11.15 மணி முதல் 12.15 மணி வரை இந்துக்கல்லூரி முதல் வேப்பமூடு சந்திப்பு காமராஜர் சிலை வரை வெற்றிக்கொடி ஏந்தி வெல்வோம் என்ற ரோடுஷோ நிகழ்ச்சி மூலம் பிரசாரம் செய்கிறார். தொடர்ந்து அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்திய பிறகு வடசேரியில் உள்ள உடுப்பி இன்டர்நேஷனல் ஓட்டலுக்கு புறப்பட்டு செல்கிறார்.

பலத்த பாதுகாப்பு
அங்கு குமரி மாவட்ட பா.ஜனதா கட்சி நிர்வாகிகளுடன், நடைபெற உள்ள சட்டசபை தேர்தல், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துகிறார். அதன் பிறகு அங்கு மதிய உணவு அருந்தும் அவர் மதியம் 2 மணிக்கு உடுப்பி ஓட்டலில் இருந்து மறவன்குடியிருப்பு ஆயுதப்படை மைதானத்துக்கு வந்து, அங்கிருந்து 2.10 மணிக்கு ஹெலிகாப்டர் மூலமாக திருவனந்தபுரம் புறப்பட்டு செல்கிறார்.

அமித்ஷா வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Next Story