பயங்கரவாதம், மனித சமுதாயத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் - ‘பிரிக்ஸ்’ தலைவர்கள் மத்தியில் மோடி பரபரப்பு பேச்சு


பயங்கரவாதம், மனித சமுதாயத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் - ‘பிரிக்ஸ்’ தலைவர்கள் மத்தியில் மோடி பரபரப்பு பேச்சு
x
தினத்தந்தி 28 Jun 2019 11:15 PM GMT (Updated: 28 Jun 2019 8:28 PM GMT)

பயங்கரவாதம், மனித சமுதாயத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என ‘பிரிக்ஸ்’ நாடுகளின் தலைவர்கள் மத்தியில் பேசிய மோடி கூறினார்.

ஒசாகா,

ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் ‘ஜி-20’ உச்சி மாநாட்டுக்கு மத்தியில் பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு நேற்று நடந்தது.

இதில் பிரதமர் மோடியுடன், ‘பிரிக்ஸ்’ அமைப்பின் பிற உறுப்பு நாடுகளான பிரேசில், ரஷியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அவர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பயங்கரவாதம், மனித சமுதாயத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. பயங்கரவாதம், அப்பாவி மக்களை கொன்று குவிக்கிறது. அது மட்டுமல்ல, பொருளாதார முன்னேற்றம் மற்றும் சமூக ஸ்திரத்தன்மையை சீரழிக்கிறது.

இன்று (நேற்று) நான் 3 முக்கிய சவால்கள் மீது கவனம் செலுத்த விரும்புகிறேன். முதலில் உலகப்பொருளாதாரத்தின் நிலையற்ற தன்மை மற்றும் வீழ்ச்சி. ஒரு தலைப்பட்சமும், போட்டித்தன்மையும், சட்ட திட்டங்கள் அடிப்படையிலான பலதரப்பு உலகளாவிய வர்த்தக அமைப்புகளை மறைக்கின்றன.

வளங்கள் தட்டுப்பாட்டால், உள்கட்டமைப்பில் 1.3 டிரில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.91 லட்சம் கோடி) முதலீடு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இரண்டாவது வளர்ச்சியை, நிலையானதாகவும், அனைத்தையும் உள்ளடக்கியதாகவும் ஆக்குவதாகும்.

டிஜிட்டல் மயமாக்கம் மற்றும் பருவநிலை மாற்றம் போன்றவை எதிர்கால தலைமுறையினருக்கு சவாலாக இருக்கிறது. சமத்துவமின்மையை குறைத்து, அதிகாரம் வழங்குவதில் பங்கேற்கிறபோது மட்டுமே வளர்ச்சியானது பயனுள்ளதாக அமையும்.

சர்வதேச நிதி மற்றும் வர்த்தக நிறுவனங்களின் பன்முகத்தன்மையை மேம்படுத்துவதற்கு தேவையான சீர்திருத்தங்களை நாம் வலியுறுத்த வேண்டும். தொடர்ச்சியான பொருளாதார முன்னேற்றத்துக்கு கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற எரிசக்திகள் குறைந்த விலையில் தவறாமல் கிடைக்க வேண்டும். நிலையானதும், எல்லாவற்றையும் உள்ளடக்கியதுமான வளர்ச்சிக்கு, சமூக உள்கட்டமைப்பு, எரிசக்தி திட்டங்களில் முதலீடு செய்வதற்கு புதிய வளர்ச்சி வங்கி முன்னுரிமை வழங்க வேண்டும்.

பேரழிவு தடுக்கும் உள்கட்டமைப்புக்கான இந்தியாவின் முன் முயற்சி, இயற்கை பேரழிவுகளை சந்திப்பதில் வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் பொருத்தமான உள்கட்டமைப்பை உருவாக்க உதவும். இதில் சேருவதற்கு உங்களை (‘பிரிக்ஸ்’ உறுப்பு நாடுகள்) அழைக்கிறேன்.

பயங்கரவாதத்தை எதிர்த்து போரிடுவதில், உலகளாவிய ஒரு மாநாடு நடத்த வேண்டும் என்று சமீபத்தில் நான் வேண்டுகோள் விடுத்து இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story