பாரிஸ்,
பிரான்ஸ் நாட்டின் நாரமண்டி மாகாணத்தின் ரூவென் நகரில் யூத மத வழிபாட்டு தலம் உள்ளது. இந்த மத வழிபாட்டு தலத்தை இன்று தீ வைத்து எரிக்க நபர் முயற்சித்துள்ளார்.
மத வழிபாட்டு தலம் அருகே இன்று அதிகாலை வந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். இதில் மத வழிபாட்டு தலத்தின் வெளிப்பகுதி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பாட்டிலில் பெட்ரோலை ஊற்றி அதில் தீ வைத்து மத வழிபாட்டு தலத்திற்குள் வீசியுள்ளார்.
இந்த தாக்குதல் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் தாக்குதல் நடத்திய நபரை கைது செய்ய முயற்சித்தனர். அப்போது அவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்துக்கொண்டு போலீசாரை தாக்க முயற்சித்தார். இதையடுத்து தாக்குதல் நடத்த முயன்ற நபரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். மேலும், விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் மத வழிபாட்டு தலத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
யூத வழிபாட்டு தலத்தில் தீ வைத்து தாக்குதல் நடத்த முயன்ற நபர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் கொல்லப்பட்ட நபர் யார்? தாக்குதலுக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 100க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளது. மேலும், 128 பேர் இன்னும் பணய கைதிகளாக உள்ளதாகவும், அதில் சிலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. பணய கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது.
காசா முனையில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போருக்கும் பிரான்சில் யூத வழிபாட்டு தலம் தாக்கப்பட்ட சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.