டி.என்.பி.எல்.; சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் இன்று மோதல்
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தனது முதல் 3 ஆட்டங்களில் திருப்பூர், நெல்லை, கோவை கிங்ஸ் அணிகளை வீழ்த்தி உள்ளது.;
கோப்புப்படம்
சேலம்,
8 அணிகள் இடையிலான 9-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கோவையில் கடந்த 5-ந் தேதி தொடங்கியது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும். இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் நடந்து முடிந்தன.
இதனையடுத்து இந்த தொடரின் 2வது கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தில் நடந்து வருகின்றன. இதில் இன்று ஒரு லீக் ஆட்டம் நடைபெறுகிறது. அதன்படி இரவு 7.15 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தனது முதல் 3 ஆட்டங்களில் திருப்பூர், நெல்லை, கோவை கிங்ஸ் அணிகளை வீழ்த்தி உள்ளது. திண்டுக்கல் அணி இதுவரை ஆடியுள்ள 3 ஆட்டங்களில் 2-ல் வெற்றியும் (கோவை, மதுரைக்கு எதிராக), ஒன்றில் தோல்வியும் (திருப்பூருக்கு எதிராக) கண்டுள்ளது.
இரு அணிகளும் சரிசம பலத்துடன் கோதாவில் குதிப்பதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம். இதனால் ஆட்டத்ஹ்டில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 12 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 8-ல் சேப்பாக்கும், 4-ல் திண்டுக்கல்லும் வெற்றி பெற்றுள்ளன.