'நாயின் வாலை நிமிர்த்த முடியாது'; வைரலாகும் சேவாக் பதிவு

இந்தியா, பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களாக மோதல் நடைபெற்று வந்தது.;

Update:2025-05-11 07:50 IST

image courtesy: PTI / File Image

புதுடெல்லி,

காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த 6-ந் தேதி நள்ளிரவில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய தளபதிகள் உள்பட 100 பேர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது அத்துமீறி தாக்குதலை நடத்தின. தொடக்கத்தில் காஷ்மீர் மாநில எல்லையோர மாவட்டங்களில் சிறிய ரக பீரங்கி தாக்குதலை நடத்திய பாகிஸ்தான், திடீரென்று டிரோன்களை ஏவின. அவை அனைத்தையும் இந்தியா முறியடித்தது. காஷ்மீரை தொடர்ந்து பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.

இதற்கெல்லாம் தக்க பாடம் கற்பிக்கும் வகையில் இந்திய ராணுவம் பாகிஸ்தானின் முக்கிய நகரங்கள் மீது டிரோன் தாக்குதலை தீவிரப்படுத்தியது. இதில் அந்த நாடு பலத்த அடிவாங்கியது. மோதல் ஒருபக்கம் நடந்து வந்த நேரத்தில் பாகிஸ்தானின் ராணுவ உயர் அதிகாரிகள், இந்திய ராணுவ உயர் அதிகாரிகளுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இதனை இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியும், பாக். துணை பிரதமரும் உறுதிப்படுத்தினார்.

இருநாட்டு தலைவர்களின் அறிவிப்புகளைத் தொடர்ந்து கடந்த 4 நாட்களாக நீடித்து வந்த தாக்குதல் முடிவுக்கு வந்ததாக கருதப்பட்டது. போர் நிறுத்தம் தொடர்பாக அறிவிப்பு வெளியானதை அடுத்து மக்கள் நிம்மதிப்பெருமூச்சு விட்ட நிலையில், ஒப்பந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்திலேயே பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து இந்தியா மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

இது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதல் குறித்து பேசிய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக குற்றஞ்சாட்டினார். அதேநேரத்தில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் இந்திய ராணுவமும் பதிலடி கொடுக்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த சூழலில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானை இந்திய முன்னாள் வீரர் சேவாக் விமர்சனம் செய்யும் வகையில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். இதில், அதன் வாலை நிமிர்த்த முடியாது. என்ன செய்தாலும் அது வளைந்திருக்கும் ("Kutte ki dum tedi ki tedi hi rehti hai") என இந்தியில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு 'என்ன செய்தாலும் நாயின் வாலை நிமிர்த்த முடியாது, அது அப்படியே தான் இருக்கும்' என பொருள் வருவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்