பெங்களூரு:
கர்நாடகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் 6 வாரத்திற்குள் மயானங்கள் அமைத்து கொடுக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு, கர்நாடக ஐகோர்ட்டு கடந்த 2019-ம் ஆண்டு உத்தரவிட்டு இருந்தது. ஆனால் கர்நாடக ஐகோர்ட்டின் உத்தரவை, மாநில அரசு நிறைவேற்றவில்லை என்று கூறி கர்நாடக ஐகோர்ட்டில் இக்பால் என்பவர் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் வீரப்பா, ஹம்சலேகா ஆகியோர் முன்பு நடந்து வருகிறது.
இந்த நிலையில் மயானங்கள் அமைப்பது தொடர்பாக கர்நாடக ஐகோர்ட்டில் அரசு வக்கீல் ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அதில் கர்நாடகத்தில் 1,441 மயானங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதாகவும், அதில் 282 மயானங்கள் மீட்கப்பட்டு உள்ளதாகவும், 859 ஆக்கிரமிப்பு மயானங்களை மீட்கும் பணி நடந்து வருவதாகவும் கூறப்பட்டு உள்ளது. மேலும் அரசு சார்பில் 23 ஆயிரத்து 815 மயானங்கள் உள்ளூர் தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாகவும், 3,765 மயானங்கள் விரைவில் ஒப்படைக்கப்படும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. மேலும் கிராமங்களில் 92 சதவீதம் மயான வசதி உள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.