அவுரங்காபாத்,
அவுரங்காபாத்தில் நேற்று சிவசேனா கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கலந்து கொண்டார். இதற்கிடையில் அவுரங்காபாத்தில் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக பா.ஜனதாவினர் முதல்-மந்திரியிடம் மனு கொடுக்கப்போவதாக தெரிவித்து இருந்தனர். இதன்படி பா.ஜனதா அவுரங்காபாத் பிரிவு தலைவர் சஞ்சய் கேனேகர் தலைமையில் பெண் தொண்டர்கள் நகரின் தண்ணீர் பிரச்சினையை எடுத்துரைக்க உத்தவ்தாக்கரே தங்க இருந்த ஓட்டலுக்கு விரைந்தனர். மேலும் அவர் வரும் போது வாகன அணிவகுப்பில் காலி பாத்திரங்களை வீசி தங்கள் எதிர்ப்புகளை தெரிவிக்க முயன்றனர்.
இது பற்றி அறிந்த போலீசார் அங்கு சென்று பாத்திரங்களை வீச முயன்ற பா.ஜனதாவினரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பங்கேற்ற பொதுக்கூட்டம் நிறைவு பெற்ற பின்னர் அவர்களை எச்சரித்து போலீசார் விடுவித்தனர்.