பனாஜி,
பா.ஜ.க. முக்கிய பிரமுகர், டிக்டாக் மற்றும் பிக்பாஸ் பிரபலம் உள்பட பன்முக தன்மை கொண்ட அரியானாவை சேர்ந்த நடிகை சோனாலி போகத் கடந்த 22-ந்தேதி கோவாவுக்கு சுற்றுலா சென்ற இடத்தில் மர்ம மரணம் அடைந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
முதலில், சோனாலி மாரடைப்பு ஏற்பட்டதில் மரணம் அடைந்து உள்ளார் என தெரிவிக்கப்பட்டது. எனினும், அவரது குடும்பத்தினர் சோனாலி இறப்பில் சந்தேகம் தெரிவித்தனர்.
கோவாவில் 24-ந்தேதி படப்பிடிப்புக்கு செல்ல வேண்டிய நேரத்தில், அதற்கு 2 நாட்கள் முன்பே அதுவும் 2 நாட்களுக்கு மட்டுமே ஓட்டல் அறையில் முன்பதிவு செய்துள்ளனர். அவரை திட்டமிட்டே கோவாவுக்கு அழைத்து சென்றுள்ளனர் என சோனாலியின் சகோதரர் குற்றச்சாட்டு கூறினார்.
இந்த வழக்கில் சோனாலியின் உதவியாளரான சுதீர் சங்வான் மற்றும் உடன் சென்ற மற்றொரு நபரான சுக்வீந்தர் சிங் வாசி ஆகியோர் மீது நேரடி குற்றச்சாட்டை சோனாலியின் குடும்பத்தினர் சுமத்தியுள்ளனர்.
சோனாலியின் சகோதரி மற்றும் உறவினர்கள் உள்ளிட்டோர் சந்தேக மரணம் என தொடர்ந்து வலியுறுத்திய நிலையில், விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தன.
இதனால் வழக்கு, இயற்கைக்கு மாறான மரணம் என மாற்றி பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரமடைந்தது. சோனாலி தனது தாயாரிடம் பேசும்போது, சங்வான் போதை மருந்து கலந்த உணவை தனக்கு கொடுத்து விட்டார்.
இதன் பின்பு பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாக எடுத்து வைத்து கொண்டு மிரட்டுகிறார். அதனை சமூக ஊடகத்தில் வெளியிட்டு வைரலாக்கி விடுவேன் என்றும் அச்சுறுத்துகிறார் என கூறியுள்ளார் என சோனாலியின் சகோதரர் ரிங்கு டாக்கா, போலீசில் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
சோனாலியின் அரசியல் மற்றும் நடிப்பு தொழிலை அழித்து விடுவேன் என சங்வான் மிரட்டி உள்ளார். சோனாலியின் மொபைல் போன்கள், சொத்து பதிவுகள், ஏ.டி.எம். அட்டைகள் மற்றும் வீட்டு சாவிகளையும் பறித்து வைத்து கொண்டு மிரட்டுகிறார் என ரிங்கு குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.
இதேபோன்று சோனாலியின் மருமகனான மொனீந்தர் போகத் கூறும்போது, எங்களுடைய சகோதரியை பாலியல் பலாத்காரம் செய்து, படுகொலை செய்துள்ளனர் என்பது நிச்சயம் என கூறியுள்ளார். இது, வழக்கின் போக்கில் தீவிரம் ஏற்படுத்தியது.
இந்நிலையில், அரியானாவில் குர்காவன் நகரில் செக்டார் 102-ல் சோனாலி தங்கியிருந்த வாடகை குடியிருப்புக்கும் சென்று போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அதில், குர்காவன் கிரீன்ஸ் என்ற குடியிருப்பின் உரிமையாளரிடம் நடந்த விசாரணையில், சில விசயங்கள் கிடைத்துள்ளன.
அதில் வாடகைக்கு தங்கியிருப்பதற்கான ஆவணங்களில், சோனாலி போகத்தின் பெயரானது, அவரது உதவியாளரின் மனைவி என பதிவு செய்யப்பட்டு இருந்துள்ளது அவரது மரண வழக்கில் புதிய திருப்பம் ஏற்படுத்தி உள்ளது.
அந்த பிளாட்டிலேயே வசித்த சோனாலி, தனது உதவியாளருடன் கோவாவுக்கு புறப்படுவதற்கு முன்பு, பிளாட்டுக்கு சென்று அதன்பின் வாடகை காரில் புறப்பட்டு விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், வாடகை குடியிருப்பின் ஆவணத்தில், உதவியாளரின் மனைவி சோனாலி போகத் என பெயர் பதிவிடப்பட்டு இருப்பது சொத்துக்காக படுகொலை நடந்திருக்க கூடும் என்ற சந்தேகத்திற்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
இதேபோன்று கோவாவில் சம்பவம் நடந்த, உணவு விடுதியின் கழிவறையில் இருந்து மெத்தம்பெட்டமைன் என்ற மகிழ்ச்சியூட்ட கூடிய போதை பொருளை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
கடந்த 23-ந்தேதி அதிகாலை 4.30 மணியளவில் சோனாலிக்கு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உடல்பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அதனால், அவரை கழிவறைக்கு அழைத்து சென்றுள்ளனர். அதுவரையிலான விவரங்களை கைது செய்யப்பட்ட உதவியாளர் உள்ளிட்ட 2 பேர் தெரிவித்துள்ளனர். அதன்பின்பு 2 மணிநேரம் என்ன நடந்தது என்பது பற்றிய விவரங்கள் எதனையும் அவர்கள் தெரிவிக்கவில்லை என போலீசார் கூறியுள்ளனர்.
இதனை தொடர்ந்து வழக்கில், ரமா மந்த்ரேக்கர் என்ற மற்றொரு போதை பொருள் வினியோகம் செய்பவரை அஞ்சுனா போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இதனால், வழக்கில் செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்து உள்ளது.
வழக்கில் நேற்று தத்தா பிரசாத் காவங்கர் மற்றும் கர்லீஸ் உணவு விடுதி உரிமையாளர் எட்வின் நூனெஸ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் காவங்கர், சோனாலி உள்ளிட்டோர் அஞ்சுனா பகுதியில் தங்கியிருந்த கிராண்ட் லியோனி ரிசார்ட் ஓட்டலில் ரூம் பாயாக பணியில் இருந்துள்ளார்.
உணவு விடுதியில் கைப்பற்றப்பட்ட சி.சி.டி.வி. பதிவில், சங்வானுடன் சோனாலி நடனம் ஆடும் காட்சிகளும், அதனை தொடர்ந்து, சங்வான் கட்டாயப்படுத்தி சோனாலிக்கு குடிக்க தண்ணீர் கொடுப்பதும், அதனை உடனடியாக சோனாலி துப்பி விடும் காட்சிகளும் காணப்படுகின்றன.
காவங்கர் மற்றும் நூனெஸ் மீது போதை பொருள் சட்டத்தின் கீழ் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு உள்ளது. உதவியாளர் சங்வான் உள்ளிட்ட 2 பேருக்கும் 10 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை மேற்கொள்ள உள்ளூர் கோர்ட்டு அனுமதி அளித்து உள்ளது. இன்று ரமா மந்த்ரேக்கர் என்ற மற்றொரு நபர் பிடிபட்ட நிலையில் வழக்கில் மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
விரிவான தகவலுக்கு: நடிகை சோனாலி வழக்கில் அடுத்தடுத்து திருப்பம்!! விடுதி உரிமையாளர் உள்பட 2 பேர் கைது