சினிமா செய்திகள்

இன்ஸ்டாகிராம் சப்ஸ்கிரிப்ஷன் சர்ச்சை - உண்மையை உடைத்த நடிகை அனன்யா

நடிகை அனன்யா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் சப்ஸ்கிரிப்ஷன் தொடர்பாக எழுந்த சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

ஐதராபாத்,

தெலுங்குத் திரையுலகில் 'வக்கீல் சாப்' படத்தின் மூலம் பிரபலமான நடிகை அனன்யா நாகல்லா, சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் சப்ஸ்கிரிப்ஷன் தொடர்பாக எழுந்த சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பிரபலங்கள் தங்களது பிரத்யேக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்வதற்காக 'சப்ஸ்கிரிப்ஷன்' (Subscription) என்ற கட்டண வசதி உள்ளது. இதனை நடிகை அனன்யா சமீபத்தில் தொடங்கினார். இதைக் கண்ட சில நெட்டிசன்கள், அவர் பணம் வசூலித்துக்கொண்டு ஆபாசமான அல்லது 'அடல்ட்' ரக வீடியோக்களைப் பகிர்ந்து வருவதாகத் தவறான வதந்திகளைப் பரப்பினர். ஏற்கனவே இதே போன்ற விவகாரத்தில் நடிகை விஷ்ணுப்பிரியா மீது வழக்குத் தொடரப்பட்ட நிலையில், அனன்யா மீதும் இத்தகைய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில், தன்னைப்பற்றிப் பரவி வரும் வதந்திகளுக்கு அனன்யா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், "எனது சப்ஸ்கிரிப்ஷன் பக்கத்தில் நான் ஆபாசமான எதையும் பதிவிடுவதில்லை. அங்கு நான் பதிவிடுவது முழுக்க முழுக்க ஆன்மீகம் மற்றும் பக்தி சார்ந்த (Devotional) விஷயங்கள் மட்டுமே. எனக்குப் பிடித்த கோவில்கள், நான் செல்லும் ஆன்மீகப் பயணங்கள் மற்றும் எனது தனிப்பட்ட வாழ்க்கை முறையையே அங்கு பகிர்ந்து வருகிறேன். இதில் ஆபாசம் என்ற வார்த்தைக்கே இடமில்லை"

"இது இன்ஸ்டாகிராம் தளம் வழங்கியுள்ள ஒரு வசதி. எனது தனிப்பட்ட விருப்பங்களையும், எனது தனிப்பட்ட வாழ்வையும் மதிக்கும் உண்மையான ரசிகர்களுக்காக மட்டுமே இந்தத் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. எதையும் தெரிந்துகொள்ளாமல் பொய்யான ஒன்றை பகிர்பவர்கள், உண்மையை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

'மல்லேஷம்' படத்தில் அறிமுகமாகி, தற்போது தெலுங்கு சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வரும் அனன்யா, தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பவர்களுக்குத் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்.