தமிழில் தேரோடும் வீதியிலே படத்தில் நடித்தவர் பாயல்கோஷ். தெலுங்கு, இந்தி, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். சமீபத்தில் பிரபல இந்தி டைரக்டர் அனுராக் காஷ்யப் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் தன் மீது திராவகம் வீச முயற்சி நடந்ததாகவும், அதில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பித்து விட்டதாகவும் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து பாயல்கோஷ் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசும்போது, சில மர்ம நபர்கள் என்னை பின்தொடர்ந்து வந்தனர். அவர்கள் என்னை இரும்பு கம்பியால் திடீரென்று தாக்கினர். அதோடு என் மேல் திராவகம் வீசவும் முயற்சித்தனர். நான் அவசரமாக காருக்குள் ஏறி தப்பினேன், ஆனாலும் எனது கையில் அவர்கள் தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது.
மர்ம நபர்களை பார்த்து நான் கூச்சல் போட்டேன். அவர்கள் முகமூடி அணிந்து இருந்தனர். அந்த கொலைகார கும்பலிடம் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பினேன். என் வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு தாக்குதலை சந்தித்ததில்லை. இது போன்ற ஒரு சம்பவம் இனி நடக்கவே கூடாது. இது குறித்து போலீசில் புகார் அளிக்க இருக்கிறேன். என்னை எதற்காக அவர்கள் தாக்க வந்தனர். இதன் பின்னணியில் இருக்கும் சதித்திட்டம் என்ன என்று எனக்கு தெரியவில்லை என்று கூறியுள்ளார்.